November 21, 2024

உக்ரைன் மீது படையெடுக்க தயாராகும் ரஷ்யா?

உக்ரைனின் கிழக்குப் பகுதியின் எல்லையில் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து ரஷ்யத் துருப்புகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றன.ரஷ்யா ஏன் படைகளைக் குவிக்கின்றது ரஷ்யாவின் நோக்கங்கள் என்பது தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால் கிழக்கு உக்ரைன் எல்லை மற்றும் 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவிற்குள் பெரிய ரஷ்ய இராணுவ நகர்வுகள் இடம்பெறுவதாக பல ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.

16 பட்டாலியன் கிட்டத்தட்ட 14,000 படையினரை கிழக்கு எல்லையில் நகர்த்தப்பட்டுள்ளார்கள். டாங்கிகள், கவச வாகனங்கள் இஸ்காண்டர் எனும் குறுகிய தூர ஏவுகணைகள் என போருக்கான கனரக தளபாடங்களும் நகர்த்தப்பட்டுள்ளன.

ரஷ்யா இப்போது கிழக்கு எல்லையில் 40,000 வரையான துருப்புக்களையும் கிரிமியாவில் 40,000 வரையான துருப்புக்களையும் நிலைகொண்டுள்ளது என உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோயுக் கருத்துத் தெரிவிக்கையில் நேட்டோவின் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை அடுத்து எல்லைகளுக்கு என்று குற்றம் சாட்டினார். அத்துடன் அந்த அந்த அச்சுறுத்தல்களுக்கு பதில் வழங்கும் முகமாக இரு படைப் பிரிவுகளையும் மூன்று வான் படைப் பிரிவுகளையும் மேற்கு எல்லைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், ரஷ்ய எல்லை முழுவதும் துருப்புக்களை நகர்த்துவது ஒரு உள் விவகாரம் என்றும் கிரிமியாவில் சில துருப்புக்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் உக்ரைன் ஆத்திரமூட்டல்களை நடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் படை எடுப்புக்கு சாத்தியங்கள் இல்லை எனவும் ஆனால் உக்ரைனுக்குள் ஊடுருவல்கைளை மேற்கொள்ளலாம் என ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஊடுருவல் என்பது ரஷ்யாவின் நம்பகமான யுத்த தந்திரோபாயமாகும். „சிறிய பச்சை ஆண்கள்“ என்று செல்லப்பெயர் கொண்ட ரஷ்ய சிறப்புப் படைகள்  2014 இல் கிரிமியாவைக் கைப்பற்றியது போன்று ஊடுருவல்களை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.