யாழ்ப்பாணம் மோசம்: வைத்தியர் சுதத் சமரவீர !
யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதே ஒரு நாளைக்கு 200 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட காரணம் என இலங்கை தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இவர்களில் சமூக அளவில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு எனக் குறிப்பிட்ட வைத்தியர் சுதத் சமரவீர, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மூலமே தொற்று கண்டறியப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும், இதன் மூலம் புதிய கொத்தணிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. இருப்பினும், இதனை மூன்றாவது அலையின் தோற்றமாக கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசெம்பரில் கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பின்னர் கொரோனா தொற்று அதிகரித்தமையை சுட்டிக்காட்டிய அவர், அது மற்றொரு அலையின் அவசரநிலை எனக் கருத முடியாது என்றும் கூறினார்.
கிறிஸ்மஸ் காலத்தில் அதிகரித்த பொது மக்கள் நடமாட்டம் பல புதிய கொத்தணிகள் உருவாக காரணமாக அமைந்தது எனக் குறிப்பிட்ட வைத்தியர் சுதத் சமரவீர, புதுவருடப்பிறப்புக்குப் பின்னர் இந்நிலையை எதிர்பார்க்கலாம் என்றும் குறிப்பிட்டார்.