பேரரசரின் கதிரை ஆட்டங்காண்கிறது!
சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஆளுங்கூட்டணியைப் பலவீனப்படுத்துவது எமது நோக்கல்ல.
ஆளும் கட்சிக்கும், பங்காளிக் கட்சிக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம். அரசாங்கத்தின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைத் திருத்திக்கொள்வது அவசியமாகும் என சிறிலங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற பங்காளிக் கட்சித் தலைவர் கூட்டத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில் பொதுஜன பெரமுன தலைமையில் கூட்டணி அமைத்துள்ள பங்காளிக் கட்சிகள் இடம்பெற்று முடிந்த பொதுத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளன.
இருப்பினும், பொதுஜன பெரமுனவின் ஒரு சில உறுப்பினர்களின் கருத்துக்களும், செயல்பாடுகளும் பங்காளிக் கட்சிகளைப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளன.
அரசாங்கத்தைப் பலவீனப்படுத்துவது பங்காளிக் கட்சிகளின் நோக்கமல்ல, ஒரு சில வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியைப் பலவீனப்படுத்துவதாகக் காணப்படுகின்றது.
இவ்விடயம் குறித்து கூட்டணியின் சிரேஷ்ட தலைவர்களுக்க பலமுறை குறிப்பிட்டும் எவ்வித சாதகமான தீர்மானமும் கிடைக்கப் பெறவில்லை.
சிறிலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் 12 அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பேச்சுவார்த்தையின் போது மாகாண சபைத் தேர்தல் முறைமை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
எல்லை நிர்ணய பிரச்னைக்குத் தீர்வு காணாமல் மாகாண சபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையில் நடத்த இடமளிக்க முடியாது.
சுபீட்சமான எதிர்காலக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமாயின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஆளும் தரப்பின் ஒரு சிலரது வெறுக்கத்தக்க பேச்சுக்கள் கூட்டணியைப் பலவீனப்படுத்துகின்றது.
முரண்பாடுகளை ஏற்படுத்தி கூட்டணியைப் பலவீனப்படுத்தி 2014 ஆம் ஆண்டு காணப்பட்ட அரசியல் சூழலை ஏற்படுத்துவது ஆளும் தரப்பின் ஒரு சிலரது நோக்கமாகக் காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் செயல்பாடுகளில் ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளை திருத்திக்கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஒரு சில செயல்பாடுகள் அரசாங்கத்துக்குப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட விதம் முற்றிலும் தவறு என்பது பேச்சுவார்த்தையின் போது சுட்டிக்காட்டப்பட்டது- என்றார்.