சைவத்தமிழர் பேரவை கண்டிக்கின்றது!
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீதான கிறிஸ்தவ மிஷனரிக் குழுவின் மிலேச்சுத்தனமான இத் தாக்குதலை சைவத்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யூனியன் கல்லூரிக்கு சொந்தமானது என கல்வித் திணைக்களம், பிரதேச செயலகம் என்பவற்றால் உறுதிப்படுத்தப்பட்ட கல்லூரி வளாகத்திற்கு உட்பட்ட காணியினுள் கிறிஸ்தவ மிஷனரிக் குழு அடாத்தாக புகுந்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளிற்கு இடையூறு விளைவித்தது.
இது மட்டுமல்லாமல் கிறிஸ்தவ மதகுரு ஒருவரின வழிகாட்டலில் அவரது பிரசன்னத்துடன் அந்த சபையை சார்ந்த பெண்கள், ஆண்கள் அடங்கிய குழுவினர் பொல்லுகளாலும் கற்களாலும் மாணவர்களை தாக்கி காயப்படுத்தினர். இது தொடர்பாக வெளிவந்துள்ள காணொளி சைவத் தமிழர்களின் மனதை ஆழமாகக் காயப்படுத்தியுள்ளது.
மிலேச்சுதனமான இச் செயலில் ஈடுபட்ட அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவ மதக் குழுவினர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். பொலிசார் இவ் விடயத்தில் மெத்தனமாக நடந்து கொள்ளக்கூடாது.
மனிதத்தை நேசிக்கும் சைவத் தமிழ் மக்கள் சார்பாக யூனியன் கல்லூரி சமூகத்திற்கு எமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தும் அதேவேளை, காயமடைந்த மாணவர்கள் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.