November 22, 2024

மாநகர காவல்துறை செயற்படும்:யாழ்.மாநகர முதல்வர் உறுதி!

திட்டமிட்டவகையில் யாழ்.மாநகர காவல்படை செயற்படுமென மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட “காவல் படை” தொடர்பில் மாநகர ஆணையாளரிடம், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரிடம் சுமார் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

“காவலாளி” சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் “காவல் படை” என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.

அத்துடன், தமிழீழ விடுதலை புலிகளின்  காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அழைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகரின் அதிகாரத்துக்கு உட்பட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாயும், வெற்றிலை துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் தண்டப் பணம் அறவிடப்படவுள்ளதாக  அறிவித்துள்ள மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இந்த நடைமுறையை கையாள்வதற்காக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ள மாநகரமுதல்வர் மாநகர காவல்துறை தனது பணிகளை திட்டமிட்டபடி முன்னெடுக்குமெனவும் அறிவித்துள்ளார்.