November 21, 2024

சரக்கு கப்பல் மோதி, பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது – 27 பேர் பலி

வங்காளதேசத்தில் சாலை போக்குவரத்துக்கு அடுத்தபடியாக நீர்வழி போக்குவரத்து மிகவும் பிரதானமாக உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மக்கள் பெரும்பாலும் நீர்வழி போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் டாக்காவில் இருந்து நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள முன்ஷிகாஞ்ச் மாவட்டத்துக்கு பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. கப்பலில் சுமார் 150 பயணிகள் வரை இருந்தனர்.‌

இந்தக் கப்பல் அந்த நாட்டின் மிகப்பெரிய ஆறுகளில் ஒன்றான ஷிதலக்கியா ஆறு வழியாக பயணித்தது.

டாக்காவில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாராயண்கஞ்ச் மாவட்டத்தில் சையத்பூர் கொய்லா காட் என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர்திசையில் வந்த சரக்கு கப்பல் ஒன்று இந்த பயணிகள் கப்பல் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பயணிகள் கப்பல் ஆற்றில் கவிழ்ந்தது. கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். அதேசமயம் விபத்தை ஏற்படுத்திய சரக்கு கப்பல் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இதனிடையே இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மீட்பு குழுவினர் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்பு படகுகளில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஆற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். ஆனாலும் பெண்கள், சிறுவர்கள் உள்பட 27 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. எனினும் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த பலரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். அதேபோல் பலர் தாமாக நீந்தி கரை சேர்ந்தனர்.

மேலும் இந்த விபத்தில் பலர் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இதனிடையே இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட துணை கலெக்டர் தலைமையில் 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக நாராயண்கஞ்ச் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகள் செலவுக்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.21 ஆயிரம் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.