யாழ்ப்பாணத்தில் 7வது மரணம்!
யாழ்ப்பாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 470 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் 7ஆவது நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாண நகரின் முக்கிய பகுதி முடக்கப்பட்டுள்ளது. சுமார் 225 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றிh் பணியாற்றும் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 117 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
ஆனாலும் மாவட்டச் செயலர் அறிவித்த முடக்கப் பகுதிக்குள் அரச மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் செயற்படுகின்றன. எமது உள்ளூர் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் மூடப்பட்டுள்ளன.
அதுவும் பண்டிகைக்காலத்தில் வர்த்தகர்கள் பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில் அவர்களின் வர்த்தக நிலையங்கள் முடக்கப்பட்டு மறுபுறம் பல்தேசிய மற்றும் தென்னிலங்கை வர்த்தக நிறுவனங்கள் அதற்கு அண்மித்த பகுதிகளில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
தென்னிலங்கை வர்த்தக நிலையங்களில் தொற்று வராது என்ற அடிப்படையில் அவர்களை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் அதிகாரிகளால் ஏன் உள்ளூர் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்கக்கூடாது.
இத்தகைய மோசமான நிலைமை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் நடக்கும் நிலையில், இந்த மாவட்டத்து மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட அமைச்சரோ, ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரோ அல்லது ஏனைய மக்கள் பிரதிநிதிகளோ வாய்மூடி மௌனமாக இருப்பது பொருத்தமற்றதெனவும் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.