பராக்! பராக்!! கோத்தா வருகிறார்!
இலங்கை ஜனாதிபதியாக கோத்தபாய தனது முதலாவது விஜயத்தை வவுனியா எல்லைக்கிராமங்களிலுள்ள சிங்கள குடியேற்றங்களை பார்வையிடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
அவரது வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பகுதியில் பல்வேறு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
கோத்தபாய ராஜபக்சவின் வடக்கு மாகாணத்திற்கான முதல் விஜயமாக வவுனியா சிங்கள குடியேற்ற கிராமமான கலாபோகஸ்வேவ பகுதிக்கு நாளை விஜயம் செய்யவுள்ளார்.
கிராமத்துடன் உரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கலாபோகஸ்வேவ பகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் குறைநிறைகள் தொடர்பாக கேட்டறியவுள்ளதுடன், பல்வேறு கிராமிய அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு கலாபோகஸ்வேவ பாடசாலை முழுமையாக சிரமதானம் செய்யப்பட்டு பிரமாண்டமான கொட்டகை அமைக்கப்பட்டு அப்பகுதி வீதிகளும் அவசர அவசரமாக செப்பனிடப்பட்டுள்ளது.
மாவட்ட அரச அதிபர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் காவல்துறை அதிகாரிகள், வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மின்சார சபையினர், சுகாதார பரிசோதகர்கள் ஆகியோரும் முழு அளவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.