November 21, 2024

ஜெனிவா கதவை முதலில் திறந்த இலங்கையின் பிதாமகர் யார்? பனங்காட்டான்


இலங்கைப் படைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென 1990ல் ஜெனிவாவுக்கு நேரில் சென்று குரல் கொடுத்த முதலாவது இலங்கையர் – அப்போது தோற்றுப்போன அரசியல்வாதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச. 2009 மே மாதத்தில் போர்க்கால குற்றச்சாட்டு பொறுப்புக்கூறலுக்கு உடன்பட்டு பான் கி மூனுடன் கூட்டறிக்கை வெளியிட்டவரும் மகிந்த ராஜபக்சதான். 
கடந்த மாதம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான 46:1 இலக்கத் தீர்மானம் சிங்கள அரசியலில் மட்டுமன்றி தமிழ் அரசியல் அரங்கிலும் பல வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

அடுத்த சில மாதங்களுக்கு அல்லது 2022 செப்டம்பர் மனித உரிமை பேரவை அமர்வுவரை இந்த விவகாரம் பல தரப்பாலும் கீறிக் கிழிக்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனை இடம்பெறலாம். அரசியல்வாதிகள், அரசியல் நோக்கர்கள், ஊடகவியலாளர்களுடன் போட்டியிட்டவாறு மெய்நிகர் வழியாக பட்டிமன்றங்களும் இடம்பெறும்.

தற்போதைய கொரோனா இடர்காலம் வழங்கியுள்ள இடைவெளி, வஞ்சகமில்லாது எல்லோருக்கும் சமதளத்தில் இதனை பேசுபொருளாக்கியுள்ளது. ஆனால், கோதபாய ஆட்சித்தரப்பைப் பொறுத்தவரையில் ஜெனிவா தீர்மானம் தலைபிளக்கும் பிரச்சனையாகியுள்ளதை கடந்த ஒரு வாரத்துள் அவர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் ஊடாகக் காணக்கூடியதாகவுள்ளது.

ஜெனிவா அமர்வு இடம்பெறும் எல்லாக் காலங்களிலும் சிங்களத் தரப்பின் பார்வை புகலிடத் தமிழரையே நோக்குவதாக இருக்கும். வெளிநாட்டுப் புலிகள்தான் ஜெனிவாவை கையாளுகிறார்கள் என்பது இவர்கள் குற்றச்சாட்டு.

உள்நாட்டுப் புலிகளை முடித்து விட்டோம், வெளிநாட்டுப் புலிகளே எங்கள் இலக்கு என்று ராஜபக்சக்கள் தொடர்ந்து கூறிவருவர். இதனையே கோதபாயவும் பின்பற்றுகிறார்.

2014ம் ஆண்டுஇ இதன் முதற்கட்டமாக சில புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இருநூறுக்கும் அதிகமான தனி நபர்களின் பெயர்களைச் சுட்டி அவர்களைத் தடை செய்வதாக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டார். 2015ல் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு வெளிநாட்டில் சில தமிழருடன் தொடர்பு கொள்வதற்காக அத்தடையை நீக்கியது.

இப்போது, கடந்த மாதத் தீர்மானம் தனது படையினரை அச்சுறுத்துவதாக உணர்கின்ற கோதபாய, தமது தமையனாரின் பாணியில் புதிய தடை உத்தரவை பிரகடனம் செய்துள்ளார். முன்னரிலும் கூடுதலான தமிழர் அமைப்புகளையும், புதியவர்கள் சிலரையும் சேர்த்து பிரகடனம் வந்துள்ளது. இஸ்லாமியர்கள் பெயரும் முதன்முறையாக இதில் இடம்பெற்றுள்ளது. கனடாவைப் பொறுத்தளவில் கனடிய தமிழர் காங்கிரஸ் (சிரிசி), கனடிய தமிழர் பேரவை (என்சிசிரி) என்பவை இதில் அடங்கியுள்ளன. மரணமாகிப்போன சில தனியாரின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது நகைப்பைத் தருகிறது.

இந்தத் தடை உத்தரவில் இடம்பெறுபவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்;க்கப்பட்டுள்ளதாகவும், இவர்களும் இவர்களுடன் தொடர்புள்ளவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் கோதபாய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சிலர் மீது கண் வைத்துவிட்டு அவர்களை கைது செய்ய திட்டம் உள்ளதுபோல் தெரிகிறது.

இனங்களின் அல்லது மதங்களின் பெயர்களில் அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாதவாறு சட்டம் இயற்ற தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்கிறது. சிலசமயம், ஏற்கனவே இவ்வாறான பெயர்களைக் கொண்ட கட்சிகளை புதிய பெயர்களுக்கு மாற்றுமாறு கோர முடியும். அப்படியானால் தமிழ், முஸ்லிம் மக்களின் கட்சிகளையே இது பாதிக்கலாம்.

இலங்கையின் படைத்துறையினர் மீது எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். படையினர் எந்தப் போர்க்குற்றமும் செய்யவில்லையென்றால் எதற்காக அவர்களைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்?

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கொண்டு சென்றாலும் தாங்கள் அஞ்சப்போவதில்லையென்றும் பீரிஸ் கூறியுள்ளார். அங்கு சீனாவும், ரஸ்யாவும் வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இலங்கையைக் காப்பாற்றும் என்பதால் அச்சமில்லையென்று கூறுகின்றார். படையினர் போர்க்குற்றம் செய்யவில்லையென்றால் அவர்களைக் காப்பாற்ற ஏன் சீனாவும் ரஸ்யாவும் தேவைப்படுகின்றன?

உயிரைக் கொடுத்தேனும் படையினரைக் காப்பாற்றுவோம் என்ற அறைகூவிய அமைச்சர் பீரிஸ், ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வீற்றோவை எதிர்பார்க்கிறார் படையினரைக் காப்பாற்றுவதற்கு.

கோதபாயவும் ஜெனிவா பற்றியே செல்லுமிடமெங்கும் பேசத் தொடங்கியுள்ளார். அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் நாட்டைப் பிரிப்பதற்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்பதுவே இவரது கருப்பொருள். இதற்குப் பக்கத்துணையாக பொதுப்பாதுகாப்பு அமைச்சரான முன்னாள் கடற்படை அதிகாரி சரத் வீரசேகர ஒத்தூதி வருகிறார் (ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில் சிறில் மத்தியு இருந்தது போன்று). மாகாண சபை என்ற பேச்சுக்கே இடமில்லை – காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் பற்றி எவரும் வாய் திறக்கக்கூடாது என்பது இவரது முழக்கம்.

முற்கூட்டியே திரைமறைவில் திட்டமிட்டதுபோல பௌத்த பிக்குகளும் மாகாண சபை விவகாரத்தை தங்கள் கைகளில் தூக்கியுள்ளனர். மாகாண சபை தேர்தலை நடத்துவது தேசத்துரோகம் என்று இவர்கள் அறிக்கை விட்டுள்ளனர்.

பதின்மூன்றாவது திருத்தம், தமிழர் அபிலாசைகள், மாகாண சபை தேர்தல் என்பவற்றை ஜெனிவா அமர்வில் இந்தியா வலியுறுத்தியதாலும், வாக்களிப்பில் இலங்கைக்கு ஆதரவாக செயற்படாமையினாலும் ஏற்பட்ட வெஞ்சினத்தின் எதிரொலியாகவே இந்தக் கோசங்களை பார்க்க முடிகிறது.

இதற்கிடையில் 54 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததும், சர்வதேச நியமங்களுக்கு எதிராக அவர்களை விசாரணையின்றி தடுத்து வைத்ததும், பின்னர் கோதபாய தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு பாவமன்னிப்பு வழங்கி விடுவித்ததும் இந்தியா மீதான நெருப்புக் காய்ச்சலை எடுத்துக் காட்டும் செயற்பாடு. இவ்வேளையில் சீனத் தலைவர் தொலைபேசி வழியாக கோதபாயவுடன் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவிகள் எதனையும் தாராளமாக வழங்க முன்வந்ததான அறிவிப்பு இதன் மறுபக்கம்.

மொத்தத்தில் ஜெனிவாவை விட்டு வெளியேற முடியாதும், அதில் தொடர்ந்து இருக்கவும் முடியாது இலங்கை தவிப்பதை காணமுடிகிறது. இவ்விடத்தில் முக்கியமான இரண்டு விடயங்களை ஆட்சித்தரப்புக்கு ஞாபகப்படுத்துவது அவசியமாகிறது.

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் கதவை முதன்முதலாக திறந்த இலங்கையர் யார்? யாருக்கு எதிராக திறக்கப்பட்டது? இங்கும் கூட இந்தியா ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்டிருப்பது தவிர்க்க முடியாது போய்விட்டது.

1987ல் ராஜிவுக்கும் ஜே.ஆருக்கும் இடையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் வழியாகவே இந்திய ராணுவம் தமிழர் தாயகத்துள் புகுந்தது. கொழும்பில் சிங்கள கடற்படையினர் ஒருவரின் துப்பாக்கித் தாக்குதலில் இருந்து ராஜி;வ் உயிர் தப்பியதும் இந்த ஒப்பந்தத்தால்தான்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஜே.வி.பி. வன்மையாக எதிர்த்து வன்செயலைக் கட்டவிழ்த்து பலரை பலியெடுத்தது. இதனைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் ஜே.ஆரின் அரசு ஜே.வி.பி.யினரை எண்ணுக் கணக்கற்று கொலை செய்தது.

அவ்வேளை, மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்றுப்போன முன்னாள் எம்.பியாக – ஒரு மனித உரிமைவாதியாக தம்மைப் பிரபல்யப்படுத்தி அரசியல் செய்து கொண்டிருந்தார். ஜே.வி.பி.யினர் நீதி விசாரணையின்றி கொல்லப்பட்டதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஜெனிவா புறப்பட்டவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் அந்த ஆவணங்கள் பறிக்கப்பட்டன. எனினும் இவர் ஜெனிவா சென்று மனித உரிமைப் பேரவையின் முன்னால் இலங்கை அரசுக்கு எதிராக மனுவைக் கொடுத்தார்.

இலங்கை அரசின் படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதன்முதலாக ஜெனிவாவில் குரல் எழுப்பியவர் மகிந்த ராஜபக்சவே. அன்று இவரோடு ஜெனிவா சென்றவர், இன்றும் இவரோடு தோழன்புடன் அரசியல் செய்யும் வாசுதேவ நாணயக்கார.

இந்த வரலாற்றை மறந்து தமிழர்களே இலங்கை அரசை ஜெனிவா குற்றக்கூண்டில் நிறுத்தி படையினரைத் தண்டிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினர் என்று கூறும் சிங்களத் தேசியவாதிகளுக்கு, 1990ல் மகிந்த ஜெனிவா சென்ற விடயம் தெரியாதா? அல்லது கூட்டமைப்பின் சம்பந்தன் பாணியில் வசதி கருதி மறந்துவிட்டார்களா?

இன்னுமொன்று – 2009 மே 18ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் உறைநிலைக்குச் சென்ற இரண்டு வாரங்களில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கி மூன் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு நிலைமையை அவதானித்தார். இலங்கையை விட்டுப் புறப்படு முன்னர் அவரும் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதன் இறுதி வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது:

‚வுhந iஅpழசவயnஉந ழக யn யஉஉழரவெயடிடைவைல pசழஉநளள வழ யனனசநளள யடடநபயவழைளெ ழக எழைடயவழைளெ ழக iவெநசயெவழையெட hரஅயnவையசயைn யனெ ர்ரஅயn சiபாவள டயற“ (மனித உரிமைகள் சட்டம் மற்றும் மனிதாபிமானம் என்பவை மீறப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் பொறுப்புக்கூறல் முறைமை முக்கியமானது) என்பது இந்த முக்கிய வாசகம்.

இதன் பிரகாரமே தருஸ்மன் தலைமையிலான மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு சமர்ப்பிக்க்கப்பட்ட அறிக்கையிலிருந்து ஆரம்பமானது போர்க் குற்றம், பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை என்னும் தொடர் தீர்மானங்கள்.

போர் முடிந்துவிட்டதாக மகிந்த ராஜபக்ச அறிவித்த அடுத்த இரு வாரங்களில் பான் கி மூனுடன் இணைந்து அவர் ஒப்புக்கொண்ட விடயம், ஒரு தசாப்தம் கடந்தும் ஓர் அடிகூட அசையாதிருக்கும் நிலையில், 46:1 தீர்மானம் இன்று அதே ராஜபக்சக்களுக்கு முன்னால் விஸ்வரூபம் கொண்டு எழுந்து நிற்கிறது.

ஜெனிவாவினதும் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்களினதும் பிதாமகர் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் பிரதமருமான தமது தமையனார் மகிந்தவே என்பதை கோதபாய நினைவிற் கொள்வது அவசியம்.