இந்தியாவிற்கு வடகிழக்கு கடலில் அனுமதியில்லை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபட இந்திய மீனவர்களை அனுமதிக்கப்போவதாக அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ள நிலையில் அதனை அரசு மறுதலித்துள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்பிராந்தியங்களில் மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு இந்திய அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய மீனவர்களுடன் இடம்பெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் இதனை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தைக் கையாள்வதில் எமக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. இந்திய மீன்பிடி படகுகள் பாரிய அளவில் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றன. அதே போன்று எமது மீன்பிடி படகுகளும் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றன. இந்த பிரச்சினையை கையாள்வது குறித்து நாம் கலந்துரையாடியுள்ளோம். அத்துடன், இந்திய மீன்பிடி படகுகள் பாரிய அளவில் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து, தடை செய்யப்பட்ட இழுவைப் படகுகளைப் பாவித்து சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இதற்கு நாம் பாரிய எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளோம். இதற்கமைய, எமது நாட்டு கடல் எல்லையை மீறுபவர்களைக் கைது செய்யுமாறு கடற்படையினருக்கும், கடலோர பாதுகாப்பு பிரிவினருக்கும் நாம் தொடர்ச்சியாக அறிவுறுத்தியுள்ளோம். ஆகவே, அரசாங்கம் என்ற ரீதியிலோ, அமைச்சு ரீதியாகவோ அவ்வாறான அனுமதிப் பத்திரங்களை வழங்க நாம் தீர்மானிக்கவில்லை என்பதை தெளிவாகக் கூறிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.