November 25, 2024

மோடியே முன்மாதிரி:இலங்கை பாரதீய ஜனதா கட்சி!

இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடுமேயன்றி தேர்தல் அரசியலுக்காக செயற்படமாட்டதென அக்கட்சி தலைவர் வி.முத்துச்சாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் பலரும் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி இந்திய பாரதீய ஜனதாக்கட்சியின் நீட்சியாவென கேள்வி கேட்கின்றனர்.நாங்கள் அதனை தொடர்ந்தும் மறுத்தே வருகின்றோம்.

இதனை மீள மீள பலரும் கேட்டேவருகின்றனர்.மீண்டும் அதனை உறுதிப்படுத்துகின்றோம்.

இந்த நிமிடம் வரை இந்திய பாரதீய ஜனதாக்கட்சிக்கும் எங்களிற்கும் எந்தவித தொடர்புமில்லை.

ஆனாலும் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சி பெயரை தெரிவு செய்ய இந்திய பிரதமர் மோடி மீது கொண்டுள்ள பற்றும் ஒரு காரணமாகும்.

ஏனென்றால் நாட்டிற்கு நல்லதை செய்யவேண்டுமென முடிவெடுத்தால் அதனை எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்காக செய்து முடித்துவிடுகின்றார்.அதனாலேயே நாங்களும் அதனை முன்னெடுக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இலங்கை பாரதீய ஜனதாக்கட்சியின் பெயரை சூட்டியதாகவும்  அக்கட்சி தலைவர் வி.முத்துச்சாமி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் எமது கட்சி இலங்கையின் சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு பயணிக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது மக்களது கல்வி மற்றும் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதே  இலங்கை பாரதீய ஜனதாக்கட்சியின் முதற்கட்ட முயற்சியாக இருக்கப்போகின்றது.

இம்முயற்சியில் அனைவரையும் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றோம்.

அனைத்து தமிழ் மாணவர்களிற்கும் முதல்கட்டமாக ஆங்கில மற்றும் சிங்கள மொழியறிவை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

முதல் கட்டமாக கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இத்தகைய கற்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம்.

இத்தகைய முயற்சிகளை முன்னெடுக்க ஏதுவாக அனைவரையும் எம்முடன் இணைந்து செயற்பட அழைப்புவிடுக்கின்றோம்.

குறிப்பாக எமது சிறார்களது கல்வி 1983ம் ஆண்டின் பின்னராக யுத்தங்காரணமாக மோசமாக பாதிப்படைந்துள்ளது.இந்நிலையிலிருந்து மாணவர்களை மீட்காது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்கவேண்டிருக்குமெனவும்  வி.முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.