ஆட்சி மாற்றத்திற்கே 46/1 பிரேரணை நிறைவேறியுள்ளது – கஜேந்திரகுமார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணை இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு முழுமையான நீதியை பெற்றுக் கொடுக்கும் பொறிமுறையை உள்வாங்கவில்லை. மாறாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புக்குள்ளாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கினை மாத்திரம் கொண்டுள்ளது.விசாரணைகள் ஏதுமின்றி தண்டிக்கப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போராளிகளை நெருக்கடிக்குள்ளாக்கும் . ஆகவே 46/1 பிரேரணையின் வெற்றியை தமிழ் மக்கள் முழுமையாக கொண்டாட முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (24) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையின் பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளை ஊக்குவித்தல் எனும் தலைப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மேற்குலக நாடுகள் கொண்டு வந்த 46/1 பிரேரணை 22 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், வெற்றியை கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது.
உள்ளக பொறிமுறையினை மையப்படுத்தியதாகவே 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டடுள்ளது. உள்ளக பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் பெறாது.
இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், தமிழ் சமூகத்துக்கு எதிரான இன அழிப்பு கொடுமைகள் ஆகியவற்றுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரம் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து மூலமாக அறிவித்தோம். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட பிரதான தமிழ் அரசியல் கட்சிகளும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்கள் ஆதரவு வழங்கின.
நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் குற்றவியல் நீதிமன்றம் குறித்து எவ்வித விடயதானங்களும் உள்வாங்கப்படவில்லை. மாறாக உள்ளக பொறிமுறை ஊடான தீர்வை மையப்படுத்தியுள்ளது. இப்பிரேரணை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரரணை அதற்கு முற்பட்ட பிரேரணைகளின் சாயலை மாத்திரம் கொண்டுள்ளது.
பிரேரரணையின் 6 ஆவது நடைமுறை பந்தியில் 13 விசேட நிபணர்களை உள்ளடக்கிய குழு நியமித்து குழுவின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2014 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் அலுவலகம் சமர்பித்த அறிக்கை, தருஸ்மன் அறிக்கை மற்றும் பெட்றிக் அறிக்கை ஆகிய அறிக்கைகள் உள்ளக பொறிமுறையினை வலியுறுத்தியதாக காணப்பட்டது.
இதுவரையில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் உள்ளக பொறிமுறையினை முறையாக செயற்படுத்தவில்லை. மாறாக காலதாமதத்தை மாத்திரம் ஏற்படுத்தின. இவ்வாறான பின்னணியில் உள்ளக பொறிமுறைக்காக 13 பேரை உள்ளடக்கிய குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளமை வெறும் கண்துடைப்பு செயற்பாடாகவே கருத வேண்டும்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கம் புலம் பெயர் தமிழர் அமைப்புக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் கிடையாது. சீனாவின்கொள்கைக்கு முழுமையாக ஈர்க்கப்பட்டுள்ள ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தை சிங்கள மக்கள் மத்தியில் வெறுப்புக்குள்ளாக்கி 2015 ஆம் ஆண்டுஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை போன்று 2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே 46/1 பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேரணையில் 4 ஆவது நடைமுறை பந்தியில் விடுதலை புலிகள் அமைப்பினால் இடம் பெற்றதாக குறிப்பிடப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயும் யோசனை குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான யோசனையாகும். விசாரணைகள் ஏதுமின்றி விடுதலை புலிகள் அமைப்பிற்கு அதியுச்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ படையினர் முன்னெடுக்க மனித உரிமை மீறல் குற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பின் மனித உரிமை தொடர்பில் ஆராயும் போது தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள போராளிகள் பாதிக்கப்படுவார்கள்.
தமிழ் தேசிய கூட்மைப்பு உட்பட அரசியல் கட்சிகளுக்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் கோரிக்கை ஒரு அரசியல் பிரவேசத்துக்கான அடித்தளமாக காணப்படுகிறது. நேரத்திற்கும், காலத்திற்கும் ஏற்றாட் போல இவர்களின் கோரிக்கைகள் மாற்றமடைகிறது. இவ்வாறானவர்களை முன்னிலைப்படுத்தி சர்வதே அரங்கில் தமிழ் மக்கள் ஒருபோதும் தீர்வை பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவே இனியாவது தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.