ஆவா அருண் பார்த்தீபன் வாக்குவாதம்! கொட்டகையினை அகற்ற காலக்கெடு!
இலங்கை அரச புலனாய்வு பிரிவின் நிகழ்ச்சி நிரலில் முன்னெடுக்கப்படும் போராட்ட கொட்டகையினை இன்றிரவினுள் அகற்ற யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.அவ்வாறு அகற்றாவிடின் மாநகரசபையால் கொட்டகை அகற்றப்பட்டு ஏலவிற்பனை மூலம் விற்பனை செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதல்வரது அறிவிப்பை கையளிக்க சென்ற யாழ் மாநகர சபை உறுப்பினரை தாக்க போராட்டகாரர்கள் முற்பட்டதாக தெரியவருகின்றது.
நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் இலங்கை காவல்துறை பாதுகாப்போடு அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு,கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் சிவில் சமுக அமைப்பு எனும் பெயரில் குழுவொன்றால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் அனுமதி பெறப்படாது கொட்டகை அமைக்கப்பட்டமை தவறு எனவும் , உடனடியாக இன்று இரவிற்குள் அகற்றுமாறும் தெரிவித்து யாழ்ப்பாண மாநகர முதல்வரின் எழுத்து மூலமான கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.
முதல்வரின் எழுத்துமூலமான கடிதத்தினை மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் வாசித்து காண்பித்தபோது போராட்டக்காரர்களுக்கும் மாநகர சபை உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ இடத்தில் போராட்டகாரர்களிற்கு ஆதரவு வழங்கிவரும் இலங்கை காவல்துறை நீதிமன்ற அனுமதி பெற்றால் மாத்திரமே போராட்டகாரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.