எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்… பிரான்சில் ஈழத்தமிழ் மாணவி உருக்கம்..(காணொளி)
“எமக்கு நீதி வேண்டும், ஏனெனில் நாங்களும் மனிதர்கள்” என பிரான்சில் இருந்து நீதிக்கான குரல் எழுப்பப் பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள, றீபப்ளிக் (République) சதுக்கத்தில், மார்ச் 14 அன்று நடைபெற்றிருந்த நீதிக்கான அறப்போராட்டத்தில், உரையாற்றிய பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ் மாணவி செல்வி. ஓவியா ரஞ்சித்குமார், தனது உருக்கமான உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் பிரெஞ்சு மொழியில் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிவம் வருமாறு,
நான் இன்று இந்த உலகப் பெரும் முற்றத்தில் வந்து நின்று நீதி கேட்கிறேன். நான் யார்? நான் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு இனத்தில் தப்பியவள். ஒரு இனப்படுகொலையின் உயிருள்ள சாட்சி. உங்களில் பலர் அறிந்திராத விடயம் என்னவெனில் “எனது இனத்திற்கு என்ன நடந்தது? தமிழினத்திற்கு என்ன நடந்தது?” என்பதே. அதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என அழைக்கப்படும் ஒரு அழகிய தீவு.. அந்த நாட்டில் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தேசிய இனம்தான் தமிழினம். தமிழினம் தனக்கான இறையாண்மையோடு தன் நாட்டில், அதாவது இலங்கையில் வாழ்ந்து வந்த இனம். அந்த உயரிய இறையாண்மையை 04/02/1948 அன்று, பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் வலுக்கட்டாயமாக சிறிலங்கா சிங்களப் பேரினவாதிகளிடம் ஒப்படைத்தது. அன்றிலிருந்து அதாவது 1948 இலிருந்து, இலங்கையில் தமிழ் மக்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இன்று வரை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் 1956, 1958, 1961, 1977, 1981, 1983 என்று தொடர்ச்சியாக இடம்பெற்ற இனப்படுகொலையானது, 2009ம் ஆண்டு மே மாதம் உச்ச நிலையைத் தொட்டது.
இன்றைக்கு 12 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் மண்ணில் எத்தனை கூடாரங்கள் இருந்தன என்பதை சற்றலைற் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்யக்கூடிய விஞ்ஞான வல்லமையை கொண்டிருந்த இந்த உலகம், இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளையும், என் கண்முன்னே நடந்த கொடூரங்களையும், கொலைகளையும் சட்டலைட் மூலம் வேடிக்கை மட்டுமே பார்த்தது.
ஒரு தனிமனிதனின் கொலைக்கு நீதி கேட்ட இந்த உலகம் ஒரு இனப்படுகொலைக்கு நீதி கேட்கவில்லை. ஏன்?
அந்த இனவழிப்பு போரினால் ஏற்பட்ட விளைவு என்ன என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?
உயிர் வாழ்வோரின் பட்டியலில் இருந்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தமிழர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விட்டன.
பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
90 ஆயிரத்துக்கும் அதிகமான இளம் விதவைகள்.
உடலில் பல பாகங்களை இழந்த, உடல் சிதைக்கப்பட்ட பல மனிதர்கள். தங்கள் பெற்றோரோடு கூடவே தமது வரலாறுகளையும், மரபுகளையும் களவு கொடுத்த தமிழ் குழந்தைகள். என்று எல்லா வகையிலும் வேண்டுமென்றே தமிழர் மீது நடத்தப்படும் இனப்படுகொலை இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
நாங்கள் பொறுத்துக் கொண்டு போகப் போக சிறிலங்கா சிங்களப் பேரினவாதத்தினரின் கொலைக் கரங்கள் தமிழர்களின் குரல்வளையை மேலும் மேலும் நெரிக்கின்றன. எங்களால் மூச்சுவிட முடியவில்லை.
உலகமே, தமிழ் மக்கள் உன்னிடம் என்ன கேட்கிறார்கள்?
- அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM).
- அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல்.
- சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல்.
- வடக்கு-கிழக்கு மாகாணத்தில், கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரை.
இவற்றையே தமிழ் மக்கள் உன்னிடம் கேட்கிறார்கள். எந்த பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சிறிலங்கா சிங்கள பேரினவாதிகளிடம் தமிழர்களின் இறையாண்மையை வலுக்கட்டாயமாகக் ஒப்படைத்ததோ, அதே பிரித்தானிய மண்ணில், அன்னை அம்பிகை அனைத்துத் தமிழர்கள் சார்பாக நீதி கேட்டு, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை 16ம் நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
உலகமே !
நாகரிகமான மனித சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதியை
தமிழர்களாகிய நாங்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்களும் மனிதர்கள். நாமும் வாழவேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.