இன அழிப்பிற்கே நீதி வேண்டும்:வேலன் சுவாமிகள்!
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ள முடியுமென பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆயினும் தற்போது மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் 46.1 என்ற உத்தேச தீர்மானம் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது என்றும் அவர் குற்றஞ்சாடியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராத இது போன்ற தீர்மானங்களை இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கும் தமது சுய நலன்களை அடிப்படையாகவும் கொண்டே வல்லரசு நாடுகள் கொண்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இரவு புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து தமிழினப் படுகொலைகளுக்கு நீதி கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர். அதில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென பிரதான கோரிக்கையாகும் முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதனை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி மொன்று நடாத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை மட்டக்களப்பிலுமொரு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு சர்வதேசத்திடமே தமிழ் மக்கள் நீதியை கோருகின்றனர். அதனடிப்படையிலையே இலங்கையை சர்வதேச நீதிமன்றின் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
இவ்வாறு சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்துவதன் மூலமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகார நீதியை பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தவிர்த்து தற்போது கொண்டு வரப்படும் 46.1 என்ற தீர்மானத்தால் தமிழ் மக்களுக்கான நீதி கிடைத்து விடாது. குறிப்பாக கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை விடவும் வலு குறைந்ததாகவே இந்த தீர்மானம் அமைந்துள்ளது.
ஆகையினாலே தான் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு பாரப்படுத்த வேண்டுமெனக் கோருகின்றோமெனவும் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.