வெடிவைத்த கல்லும் போச்சு!
வவுனியாவின் எல்லைக்கிராமங்களை இலங்கை அரசு திட்டமிட்டு ஆக்கிரமித்துவருகின்ற நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்தை நோக்கி தனது பார்வையினை செலுத்தியுள்ளது.
அப்பகுதியை சேர்;ந்த தமிழ் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவளத் திணைக்களத்தினரும் தடைவிதித்துள்ளனர்.
இந்தக் கிராமத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் குடியேற்றங்கள் எதுவும் இல்லை.
அப்பகுதியில் போருக்கு முன்னர் சிறுவர் பாடசாலை ஒன்று இருந்தது. அப் பாடசாலையில் வயலுக்குச் செல்பவர்கள் மட்டுமே தங்கியிருந்து வயலுக்குச் செல்வார்கள்.
ஆனால், அப்பகுதிக்குள் உட்செல்வதற்கோ காணிகளைத் துப்புரவு செய்யவோ இராணுவத்தினரும், வனவளத் திணைக்களத்தினரும் தடை விதித்துவருகின்றனர்.
இந்தப் பகுதியில் வசித்த மக்கள் தமது காணிகளுக்கான உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும், வெடிவைத்தகல் கிராமத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் அப்பகுதிக்கு மக்கள் சென்று தமது காணிகளைத் துப்புரவு செய்ய தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர்.
இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 15 குடும்பத்தினர் மாத்திரமே இக்கிராமத்தில் உள்ள தமது சொந்தக் காணிக்குள் குடியேறுவதற்கு கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தை இராணுவம், வனவளத்திணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தும், கிராமத்தில் உள்நுழைவதற்கான அனுமதிப் பத்திரத்துடன் இந்தப் பகுதியிலுள்ள தம் சொந்தக் காணிகளை துப்புரவு செய்ய சென்ற போது இராணுவத்தினர் தடைவிதித்துள்ளனர்.