November 25, 2024

வீட்டிலிருந்து சிவராத்திரி?

தீவிரமடைந்து வரும் கொரோனா பரம்பலை கருத்தில் கொண்டு சிவராத்திரி வழிபாடுகளை அமைதியாக முன்னெடுக்க வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாளை வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் நடைபெறவுள்ளது. ஆனால் கடந்த வாரத்திலிருந்து வடமாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகின்றது. அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபாடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும் நடாத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் மேற்கூறிய கட்டுப்பாட்டுகளுடன் நடைபெறவுள்ள இவ்வருட சிவராத்திரி வழிபாடுகளில் கொரோனா தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அவற்றைக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.