November 25, 2024

கறுப்பு ஞாயிறு:வடகிழக்கு கணக்கிலெடுக்கவில்லை!

இலங்கை வாழ் தென்னிலங்கை கத்தோலிக்கர்கள், நேற்றைய ஞாயிறு தினத்தை, ‚கறுப்பு ஞாயிறு‘ ஆக, அனுஸ்டித்த போதும் வடகிழக்கில் அதனை பொருட்படுத்தவேயில்லை.

கோத்தபாயவை வெல்ல வைக்க பாடுபட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக நிராகரித்துள்ளார்.அத்துடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின்  உண்மையான  மூளைசாலி யார் என்பதை வெளிப்படுத்துவதே எமது முயற்சியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணத்திலுள்ள தேவாலயங்களைத் தவிர, ஏனைய மாவட்டங்களிலுள்ள தேவாலயங்களுக்குச் சென்றிருந்தவர்கள் கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தனர். ஞாயிறு விசேட திருப்பலிக்குப் பின்னர். தேவாலயங்களுக்கு முன்பாக அமைதிவழியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விசேடமாக உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் குண்டை வைத்தவர்கள், அதற்காக நிதி வழங்கியவர்கள், எந்த அரசியல் சக்தி இதன் பின்னணியில் செயற்பட்டது. அதற்கு சர்வதேச அமைப்புகள் ஒத்தழைப்பு வழங்கியனவா என்பது தொடர்பில், நேர்மையான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அரசாங்கம் அதிகமாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்பதே தனது உணர்வு என்றார்.

எமக்கு முஸ்லிம்களுடன் எவ்வித வைராக்கிமும் இல்லை. இதை வழிநடத்தியவர் யாரெனத் தேடுவது, முஸ்லிம்கள் மீதான கோபத்தால் அல்ல. தவறு யார் செய்தாலும் தவறே. இதனை வழிநடத்தியவர் யார்? என்பதைத் தேடுவதைப் பிற்போட முடியாது. அவர் யாரென விரைவில் தேடுவது அவசியமாகுமெனத் தெரிவித்த அவர், அதனை வெகுவிரைவாகச் செய்ய வேண்டும்;

இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் வியூகத்தை, எமக்குக் காண்பிக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கத்திடம் இதைத்தான் எதிர்பார்க்கின்றோம் என்றார்.