சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு
இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.குஞ்சண்ணை என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர் 2008ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் தேசியப்பணியாற்றிய அனைத்துச் செயற்பாட்டாளர்களையும் அந்நாட்டு அரசு கைதுசெய்து செயற்பாடுகள் அனைத்தும் முடக்க நிலைக்குத் தள்ளியபோத அக்காலப்பகுதியில் எமது அமைப்பினால் செயற்பாடுகளை மீண்டும் இயங்கு நிலைக்குக்கொண்டுவரப் பணிசெய்யுமாறு அழைக்கப்பட்டபோது காலத்தின் தேவையறிந்து தன்னை ஓர் செயற்பாட்டாளராக இணைத்துத் தேசியச் செயற்பாடுகளை முன்னகர்த்தியவராவார்.
2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்திலும் மனந்தளராது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கமைவாக மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் உறுதியோடு செயலாற்றியவராவார். இவர் தனது அன்பாலும் பொறுமையாலும் மக்களது மனங்களில் நிறைந்தவர்.
இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் நாட்டுப்பற்றாளர் என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.