November 25, 2024

வடக்கில் புதிதாக 13!

கொரோனா தடுப்பூசிகளை மேலும் இலங்கைக்கு தருவிப்பது தொடர்பான அரசின் அறிவிப்புக்களின் மத்தியில் வட மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர் யாழ்ப்பாண நகரிலுள்ள திரையரங்கில் பணியாற்றுபவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்;.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 309 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் ஹார்கில்ஸ் கட்டடத் தொகுதியில் உள்ள திரையரங்கில் பணியாற்றும் பணியாளர்கள். அந்த திரையரங்கில் பணியாற்றுபவருடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்றுள்ளமையை அடுத்து திரையரங்கு கடந்த இரண்டு நாளாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 451 பேரின் மாதிரிகள்; பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.