புலிநீக்க அரசியல்:முகத்திரைகள் கிழியும் நேரம்!
வடக்கிலும்; புலம்பெயர் தேசத்திலும் தங்களை தாங்களே கருத்துருவாக்கிகளாக சொல்லிக்கொள்ளும் தூதர நிதிகளில் வாழ்க்கை நடத்தும் கும்பல்கள் அம்பலமாகியேவருகின்றன.
தூதர்களுடன் தனிப்பட்டு பேசிக்கொள்ள வாகனங்கள் விட்டு அழைக்கப்படும் பிரமுகர்கள் வரிசையில் பலரும் பின்கதவு டீல்களை பேசிக்கொண்டு முன்புறமாக பக்கம் பக்கமாக கட்டுரை வடித்துக்கொண்டிருப்பது சாதாரணமாகிவிட்டது.
இன்னும் சிலரோ காணொலி கலந்துரையாடல் தூதரகங்களிற்கு இரவு நேர பயணமென கல்லா கட்டுகின்றனர்.
அண்மையில் பொத்துவில் பொலிகண்டி பேரணிக்கு ஆதரவு கோரிய போது ஆமி கொன்ற மூவருக்கு புலிகள் கொன்ற இருவர் வீதத்தில் ஆட்களை தருவதாக விளக்கமளித்துள்ளார் வவுனியாவை சேர்ந்த சிவில்(?) சிங்கம்.
இன்னொருபுறம் மன்னாரிலிருந்து வாய் வீச்சு மற்றொரு சிங்கம் பொத்துவில் -பேரணிக்கு புதிய வியாக்கியானம் கொடுக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இனஅழிப்பை நிரவி மூட முஸ்லீம்களிற்கும் நடந்தது இனஅழிப்பென புதிய வியாக்கியானங்களுடன் மற்றொரு கும்பல் தூதரக ஆலோசiயுடன் நடந்து திரிந்தது தெரிந்ததே.
இத்தகைய கும்பல்களது முகத்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார் தமிழ் தேசிய பரப்பில் அறியப்பட்ட கருத்தியலாளர் ஜெரா.
2009 ஆம் ஆண்டிலிருந்து தமிழும், ஆங்கிலமுமாகப் புதிய பல சொற்களை நம் அகராதியில் இணைத்துக்கொண்டிருக்கிறோம். பாதுகாப்பு வலயம், நலன்புரி நிலையம், எல்.எல்.ஆர்.சி, சர்வதேச விசாரணை, கலப்பு நீதிப்பொறிமுறை, நிலைமாறுகால நீதி, ஓ.எம்.பி எனச் சிலவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தச் சொற்களை நாமோ, நம் ஊர் பண்டிதர்களோ உருவாக்கவில்லை. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈழத் தமிழர்களாகிய நமது தலையெழுத்தின் எழுபத்தைந்து வீதப் பக்கத்தை எழுதிக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்கள்தான் கண்டுபிடித்திருக்கின்றன. முன்மொழிந்திருக்கின்றன. நடைமுறைப்படுத்தியிருக்கின்றன. தற்போது சீனாவி்ன் மணமகளாகிவிட்ட சிறீலங்காவை வழிக்குக்கொண்டுவருவதற்காக அமெரிக்காவும், இந்தியாவும் கையிலெடுத்திருக்கு ஐ.நா.மனிதவுரிமைகள் பேரவையின் அறிக்கையாயுதங்களிலும் புதிய சொற்கள் உள்ளன. அதனை முன்வைத்து தற்போது வந்திருக்கும் முதற்சொல் Mass Atrocities.
அதென்ன Mass Atrocities?
தமிழில் பாரிய அட்டூழியங்கள் என நேரடியாக மொழிபெயர்ப்பு செய்துகொள்ளலாம். மொழியாக்கமல்ல. இந்த Mass Atrocities என்பது இரண்டாம் உலகப்போரின் முடிவோடு, 1948 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. அதாவது இனப்படுகொலை, மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள், இனச்சுத்திகரிப்பு மற்றும் வலிந்த ஆக்கிரமிப்பு ஆகிய சர்வதேச குற்றங்கள் மூன்றையும் உள்ளடக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதிகம் யார் பயன்படுத்துகிறார்கள் எனில், அரச சார்பற்ற நிறுவனங்கள்தான். ஏனெனில் இந்த Mass Atrocities என்கிற பிரதான வலயத்தை வரைந்து அதற்குள் மேற்படி நான்கு குற்றங்களையும் உள்ளடக்கி திட்டங்களை முன்வைப்பது பொருளாதார ரீதியில் இலாபகரமானது. நல்லிணக்கம், நீதி, நிலையான அபிவிருத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கான உட்கட்டமைப்பு விருத்தி என திட்ட முன்வரைவுக்கான எண்ணங்கள் இதற்குள் கொட்டிக்கிடக்கின்றன. வெறுமனே இனப்படுகொலை என்றோ, போர்க்குற்றம் என்றோ பதாகைகளைக் காவிக்கொண்டு சிறீலங்காவுக்குள் யாராலும் நுழைய முடியுமா?
பாதிக்கப்பட்ட தரப்பாருக்கு பொருத்தமானதா Mass Atrocities?
என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் பொருத்தமற்றது என்பேன். இங்கு நடந்திருப்பது இனப்படுகொலை என்றோ, போர்க்குற்றம் என்றோ, இனச்சுத்திகரிப்பு என்றோ ஒரு முடிவுக்கு வரமுடியாமல்தான் 11 வருடங்களை உலகம் கழித்திருக்கிறது. குறைந்தபட்சம் காணாமலாக்கப்பட்டவர்களின் விடயத்திற்குக் கூட ஒரு வலுவான நீதிப்பொறிமுறையை முன்வைத்து, அதனை முன்னோக்கி நகர்த்த முடியாத மிகப் பலவீனமான நிலையில்தான் சர்வதேச சமூகம் அம்பலமாகி நிற்கிறது. இந்நிலையில் பொதுவான ஒரு பார்வையின் கீழ் தமிழர் விடயத்தை வரையறுப்பதானது, நீதித் தேடலை மேலும் தூரப்படுத்தும். சாட்சிகள் தெருவில் கிடந்து இறந்தே போக, திட்டங்கள் மேலும் மேலும் விரிவுபெறும். பணம் பெருகும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு?
மற்றையது, பிரதான முக்குற்றங்களையும் ஒற்றை அலகின் கீழ் கொண்டுவருவதானது, இத்தகைய குற்றங்களில் ஆகிய இருதரப்பினருமே ஈடுபட்டனர், எனவே இரு தரப்பையும் விசாரணைக்கு அழைத்துவாருங்கள் என்ற கோசம் வலுப்பெற வழிசமைக்கும். புலிகள் தரப்பில் போரில் ஈடுபட்டவர்கள், தலைமைதாங்கியவர்கள் என யாருமற்ற இன்றைய நிலையில் ஒரு தரப்பை மட்டும் விசாரிக்க முடியாதெனக் கூறி, “கிளம்பு..கிளம்பு” நிலைதான் உருவாகும். அப்படியொரு நிலை வருமாயின் வாழ்க்கை யாருக்கெனில் சூனாபானாக்களுக்குத்தான். எனவே நீதி, தீர்வு, தண்டனை, பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்கள் நீர்த்துப்போய், சமாதானம், நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற கோசங்களே எதிர்காலத்தில் வலுப்பெறும். இலங்கை மாதிரியான அரசுகளிடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இந்தக் கோசங்களின் கீழேயே திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் இயலும்.
இனப்படுகொலை என்று விசாரிக்கத்தொடங்கி, அதன் வரலாற்றைத் தேடத்தொடங்கினால் சிறீலங்கா சுதந்திரமடைவதற்கு முன்பிருந்து ஆரம்பமாவதை அவதானிக்கலாம். அத்தோடு இனப்படுகொலை என்று போனால் அதன் வரலாற்றில் சிறீலங்காவுக்கு மட்டும் பங்கில்லையே. அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான் என எத்தனையோ தலைகள் இருக்கின்றன. எனவே போர்க்குற்றம்தான் சிறீலங்காவுக்குப் பொருத்தமானது. போரக்குற்றம் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பின் மீதே முன்வைக்க முடியும். நீதிக்கான விசாரணையில் அரசு புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் எனக் கூறி ஆதாரங்களை முன்வைத்தால், அது இன்னொரு பக்க வாசலைத் திறந்துவிடும். இலங்கையை நீண்டகாலத்திற்கு கையாள இந்த மாதிரி கிளைக் கதைகளே அவசியப்படுகின்றன. எனவே சிறீலங்கா விடயத்தை மென்மையான சொற்களுக்குள் வைத்து, இழுத்தடிப்பான சர்வதேச அரசியலைச் செய்யவே இந்த புதிய சொற்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதில் தமிழர்களுக்கு எவ்விதத்தில் நீதி கிடைக்கும், விசாரணை நடக்கும் என்றெல்லாம் கேட்டால், கோபித்துக்கொள்வார்கள்.