பணிப்புறக்கணிப்பு!! மருத்துவமனையில் படையினர்!!
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிற்றூளியர்களின் பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக தொடர்கின்ற நிலையில் இன்று மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட மருத்துவமனைக்கு செல்லும் நோயாளர்களை வரவேற்பதில் இருந்து மருத்துவரிடம் அழைத்துக்கொண்டு செல்வது வரை முழு பணிகளையும் படையினரே மேற்கொண்டு வருகின்றார்கள்.படையினரின் இந்த நடவடிக்கையால், படையினரை கொண்டு மக்கள் சேவையினை அரசு மேற்கொள்ளுமாக இருந்தால் அரச உத்தியோகத்தர்கள் எதற்கு என்ற கேள்வி முல்லைத்தீவு மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.
சிவில் நடவடிக்கைகளில் படையினரின் தலையீடுகள் அதிகரித்துள்ளமையை எடுத்துக்காட்டும் செயற்பாடாக அமைந்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவ மயப்படுத்தலின் உச்ச நிலையை காட்டுவதாகவும் முல்லைத்தீவு மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
சுகாதார அரச ஊழியர்களுக்குரிய பதவி உயர்வு வழங்குதல், பயிற்சிகளின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.