November 25, 2024

தமிழீழம் தேவையில்லை:வடக்கு மாகாணமே போதுமாம்!

ஏன்றுமே பிரிக்கப்படாத வடகிழக்கு இணைந்த மாகாண ஆட்சியென சொல்லிவந்த டக்ளஸ் தரப்பு தற்போது வடக்கு கிழக்கு தனித்தனியாக கொண்ட மாகாண சபையை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை வலுவாக நடைமுறைப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு அமைய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் நேற்று(21) கையளிக்கப்பட்ட பரிந்துரைகளிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பரிந்துரைகளை டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர், புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவின் தலைவர் றொமேஸ் டி சில்வா தலைமையிலான நிபுணர் குழுவினரிடம் கையளித்தனர்.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்.

அதேவேளை, மாகாணசபையை மேலும் வலுப்படுத்தும் ஏற்பாடுபாடுகளும் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையே நிபுணர் குழுவிற்கு வழங்கியுள்ள தமது பரிந்துரையில் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான அதிரகாரங்களை பயன்படுத்தும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டவர்கள் சந்தர்ப்பத்தினை பாழாக்கிவிட்டனர் என்று குற்றஞ்சாட்டி வருகின்ற ஈ.பி.டி.பி, மாகாண சபை முறைமையை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்நோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அடைந்து கொள்ள முடியும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பிலும் குறித்த விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.