மட்டக்களப்பில் காவல்துறைக்கு கொரோனா!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் உதவி பொறுப்பதிகாரிக்கு, கொரோனா வைரஸ் தொற்று, இன்று (19) உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி அதிகாரி சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றபோதே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய பொலிஸாருக்கு பிசிஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தன
இதனிடையே நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 3 மரணங்கள் நேற்று பதிவாகின.
அதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் என உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 433 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இதனை குறிப்பிட்டுள்ளது.
மாத்தளை பகுதியை சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவருக்கு மாத்தளை பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கலகெடிஹேன பகுதியை சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவருக்கு வத்துப்பிட்டி வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின்னர், அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
நுகேகொடை பகுதியை சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவராக கண்டறியப்பட்டார்.
அதன் பின்னர் அவர் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.