உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு! சீனாவின் காலனித்துவமாக மாறிவருகின்றது – முன்னாள் ஜனாதிபதி ஆதங்கம்
நாங்கள் உயிரைப் பணயம் வைத்து உருவாக்கிய நாடு இப்போது பின்னோக்கி செல்கிறது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மறைந்த விஜய குமாரதுங்கவின் 33ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், இலங்கையில் அதிகளவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருப்பது குறித்தும் எதிர் கட்சிகள் கடுமையான விசனங்களை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில் இந்தியாவும் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் செய்தியாளர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதில் வழங்கிய அவர், இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என்றும், ஆட்சியாளர்கள் நாட்டை சீனாவிடம் தாரை வார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.