மனோ கணேசன் போட்டுக்கொடுத்தார்?
வீட்டுக்கு வந்தார்கள். சுவையான தேனீரும், இருக்கமான வாக்குமூலமும் கொடுத்தேன்.
மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு.
தன்னிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளிடம், “சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், நீங்கள் நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, மரியாதைக்குரிய நீதிமன்றங்களை தவறாக வழி நடத்தி, அரசாங்கத்துக்கு தேவையான தடையுத்தரவுகளை, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய வாங்குகிறீர்கள்” என்று பொலிஸ் மீது குற்றம்சாட்டி வாக்குமூலம் அளித்ததாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சார அமைச்சருமான மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
மனோ எம்பி இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,
மாங்குளம் பொலிஸ், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் AR154/21 என்ற இலக்கத்தின் கீழ் பெற்றதாக கூறப்படும் தடையுத்தரவை நான் பெப்.6ம் திகதி மீறினேன் என்பதே குற்றச்சாட்டு.
மாங்குளம் பொலிஸ் அறிவித்து, கொகுவளை நிலைய அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை அடுத்து வீட்டுக்கு வந்து வாக்குமூலத்தை பெறும்படி நான் கூறியிருந்தேன்.
எட்டு (08) விஷயங்களை உள்ளடக்கி, எழுத்து மூலமாக ஆங்கில மொழியில், இலங்கை பொலிசை சேர்ந்த பிரதம ஆய்வாளர் பரணகம, கான்ஸ்டபிள் நிஷங்க ஆகியோருக்கு நான் வழங்கிய வாக்குமூலத்தின் விபரங்கள் பின்வருமாறு:
(1) எனக்கு ஒருபோதும் எந்தவித தடை உத்தரவும் நேரடியாக ஒருபோதும் வழங்கப்படவில்லை.
(2) அப்படியான ஒரு உத்தரவு ஒலிபரப்ப பட்டிருந்தாலும், பேரணியின் போது இரைச்சல் காரணமாக, நான் அதை செவிமடுத்திருக்கவில்லை.
(3) எவ்வாறாயினும் நான் கோவிட்19 சுகாதார வழிமுறைகளை எனக்காகவும், பிறருக்காகவும் எப்போதும் கடைபிடித்து வருகிறேன்.
(4) இத்தகைய ஆர்ப்பாட்டங்களை, பேரணிகளை, ஊர்வலங்களை, கூட்டங்களை நான், கொழும்பு மாநகரின் பொது இடங்களில், சாலைகளில், நாட்டின் ஏனைய இடங்களில் தினசரி காண்கிறேன். அன்றும், அதற்கு முன்னும், பின்னும் இன்றும், இப்போதும் இவை நடைபெறுகின்றன. ஆகவே ஒரே மாதிரியான சம்பவங்களுக்கு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு சட்டங்கள் இந்நாட்டில் இருக்கின்றன என நம்புவதற்கு எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.
(5) நான் ஒரு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். கட்சி தலைவர். கூட்டணி தலைவர். சமீபத்தைய முன்னாள் அமைச்சரவை அமைச்சர். நான் சட்டம், ஒழுங்கை மதிப்பவன். நீதிமன்றங்களை மதிப்பவன். ஆனாலும், இப்போது சட்டமாஅதிபர் திணைக்களத்தின் ஒத்தாசையுடன், மரியாதைக்குரிய நீதிமன்றகளுக்கு தவறான தகவல்களை தந்து, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைய தடையுத்தரவுகளை இலங்கை பொலிஸ் வாங்குகின்றது என நான் கவலை, சந்தேகம் கொள்கிறேன்.
(6) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, அரசாங்கத்தை எதிர்த்து நடத்தபட்டதே தவிர, அது நாட்டை எதிர்த்து நடைபெறவில்லை. அரசாங்கம் என்பதற்கும், நாடு என்பதற்கு இடைப்பட்ட வேறுபாடு பற்றிய அரசியல் அறிவு எனக்கு தெளிவாக இருக்கின்றது. ஆகவே இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.
(7) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, எமது நாட்டின் அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டதால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.
(8) மேற்கண்ட எதிர்ப்பு பேரணி, பல்லின, பன்மத, பன்மொழி நாடான இலங்கை மக்களின் பொதுவான, தமிழ் பேசும் மக்களின் குறிப்பான ஜனநாயக எதிர்பார்ப்புகளான, நீண்டகாலமாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, ஜனாசா நல்லடக்க பிரச்சினை, தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினை, தமிழ் பெளத்த, இந்து புராதன சின்னங்கள் தொடர்பிலான அகழ்வாராய்ச்சி திணைக்கள பிரச்சினை ஆகியவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததால், இந்த அரசாங்க எதிர்ப்பு பேரணியிலிருந்து பின்வாங்க எனக்கு எந்தவித காரணமும் இருக்கவில்லை.