November 25, 2024

குருந்தூரில் இருப்பது ஆதி சிவனே!

குருந்தூர்மலையில் மீட்கப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்கள் பௌத்த விகாரையின் மண்டபத்தூண் என சிங்கள தொல்லியலாளர்கள் வாதிட தொடங்கியுள்ளனர்.

ஆயினும் சிவலிங்கம் என்றால் அதன் மேற்புறலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள ஆவுடை என்ற பாகத்தையுமே நினைக்கின்றோம்.ஆவுடை என்னும் பாகம் வேறாக லிங்கம் வேறாக தெரியத்தக்கவாறு செதுக்கப்பட்ட பகுதியே சிவலிங்கம் என்றும் கருதுகிறோம்.

ஆனால் சிவலிங்கம் என்பது நீண்ட தூணும் அதைச்சுற்றி அதன் நடுவில் பொருத்தக்கூடியதாக அமைக்கப்பட்ட ஆவுடையும் என்று இரண்டு வெவ்வேறு பகுதிகளைக் கொண்டது.இவ்வாறு தனித்தனிப் பகுதிகளாக உருவாக்கப்படும் இரண்டும் பொருத்தப்பட்டே சிவலிங்கம் உருவாக்கப்படும் என இந்து மத தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிவலிங்கம் என்பதன் தோற்றுவாய்க்கு பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

நடுகல் வழிபாடே சிந்தனை வளர்ச்சியுடன் பேரிறையைக் குறிக்கும் அடையாளமாக சிவலிங்கமாக உருவாகியது என்ற கருத்து.அபிசேகப் பொருள்கள் ஓடிச் சென்று சற்றுத்தள்ளி விழ ஆவுடை என்ற லிங்கத்தைச் சுற்றிய பாகம் பிற்காலத்தில் உருவானது.

திருமாலும் பிரம்மனும் தேடிக்காணா பிழம்பின் குறியீட்டு வடிவமே சிவலிங்கம் என்ற கருத்து.இப்படியாக வேறும் கருத்துகள் உண்டு.

பன்றி வடிவம் கொண்ட திருமால் நிலத்தை தோண்டிச் சென்றும் அடியைக் காணமுடியவில்லை.எனவே அதைக் குறிக்குமுகமாக சிவலிங்கத் தூண் நிலத்தில் நடப்பட்டுகின்றது என்று கூறலாம்.ஒரு பகுதி வான் நோக்கி மறு முனை நிலத்தினுள இருக்கும்.

நடைமுறை நோக்கில் பார்த்தால், சிவலிங்கம் உறுதியாக இருக்க நிலத்தில் ஒரு பாகம் புதைக்கப்படுகின்றது என்று கொள்ளலாம்.

எது எவ்வாறு இருப்பினும் நாம் வெளிப்புறமாகக் காணும் சிவலிங்கம் தூணின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே.

புதைந்த சிவலிங்கத்தின் ஆவுடை உடைபட்டுவிட்டால் அகழ்வாராய்ச்சியில் நீண்ட தூண் மட்டுமே எஞ்சும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.