P2P பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சட்டநடவடிக்கையாம்! எச்சரிக்கும் இராணுவத்தளபதி
தமிழர்களுக்கான நீதிகோரி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுத்த தமிழர் எழுச்சி பேரணி கொவிட் -19 விதிமுறைகளுக்கு முரணானதாயின் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.ஜெனிவா நெருங்கும் காரணத்தினால் மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கு பலம் சேர்க்கலாம் என்ற எண்ணத்திலேயே இவ்வாறான பேரணிகளை நடத்தி நாடகமாடுகின்றனர் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையானது ஜனநாயக சுதந்திர நாடாகும். இந்த நாட்டில் சுதந்திரமாக நடமாடவும், உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், தேசிய பாதுகாப்பிற்கு எந்த பங்கமும் இல்லாத எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்க எமது மக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு. எனினும் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டனர். மனித உரிமைகள் இன்றும் பறிபோய்க்கொண்டுள்ளது, மனித உரிமை மீறல்களை செய்யும் இராணுவம் இலங்கையில் உள்ளதென புலம்பெயர் அமைப்புகளும் சர்வதேச அமைப்புகளும் கூச்சலிட்டுக்கொண்டு இருந்தாலும், அல்லது சர்வதேச புலம்பெயர் அமைப்புகளின் பணத்திற்காக இலங்கையில் இருந்துகொண்டு செயற்படும் நபர்கள் கூறிக்கொண்டு இருந்தாலும் எமது வேலைத்திட்டம் என்ன என்பதில் நாம் தெளிவாக உள்ளோம்.
உண்மையில், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுகின்றது என்ற கோஷத்தை இலங்கையில் இருந்துகொண்டு எழுப்பும் நபர்கள் வெளிநாட்டு பணத்தை இலக்கு வைத்து செயற்படுகின்றனர் என்பது தெளிவாக தெரிகின்றது. அதனால் தான் சுதந்திர தினத்தன்று நாட்டில் சுதந்திரம் இல்லையென இவர்கள் கூறுகின்றனர். நாட்டில் சுதந்திரம் இல்லையென்பது இப்போதுதான் இவர்களுக்கு நினைவிற்கு வருகின்றதா? எவ்வாறு இருப்பினும் அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடவுள்ள நிலையில் அதற்கு அடித்தளம் ஒன்றை உருவாக்கி மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கு பலம் சேர்க்கும் செயற்பாடாக இவற்றை முன்னெடுக்கின்றனர்.
இவை முற்றுமுழுதாக நாடகமாகும். நாட்டில் சுதந்திரம் உள்ளதா இல்லையா என்பதை வடக்கு கிழக்கில் பார்த்தல் தெரியும். வடக்கின் மக்கள் மனநிலை என்ன என்பதும் அவர்கள் எதனை விரும்புகின்றனர் என்பதும் எமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறு இருந்தும் ஒரு சிலர் சர்வதேச பணத்திற்காகவும், வேலைதிட்டங்களுக்காகவும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என்றார்.
தற்போது நாட்டின் கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமைகளை கருத்தில் கொண்டிருக்க வேண்டும். இப்போது பேரணியொன்று இடம்பெற்று முடிந்துள்ளது. கூட்டங்களை நடத்த முன்னர் தற்போது நாட்டின் கொவிட் -19 பரவலை கட்டுப்படுத்தும் சட்ட கோவைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை மீறிய வகையில் இவ்வாறான கூட்டங்கள் இடம்பெறும் என்றால் அதற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
சுகாதார வழிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். தவறுகள் இடம்பெற்றுள்ளது என்றால் அதனை பார்த்துகொண்டு இருக்க முடியாது. வடக்கில் இடம்பெற்ற கூட்டத்தை தமிழர் அரசியல் வாதிகள் ஒருசிலர் கூட கண்டித்துள்ளனர். இப்போது கொவிட் -19 பரவல் காலத்தில் முன்னெடுக்க கூடாத விடயங்கள் என சிலவற்றை நாம் கூறியுள்ள நிலையில் இவர்கள் அதனை மீறுவது தவறானதே என்றார்.