அனைத்துலக விசாரணை வேண்டும்! ஈருறுளிப் பயணம் ஆரம்பம்
சிறிலங்கா அரசினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனும் தீர்மானத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலும் 08.02.2021 அன்று நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன்றலில் இருந்து கடும் பனிப்பொழிவும் குளிர்காற்றின் மத்தியிலும் இயற்கையின் பெரும் சவாலோடு மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பமானது. இவ்வறவழிப் போராட்டத்தினை முன்னிட்டு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடனும் நெதர்லாந்து வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடமும் இணையவழியிலே சந்திப்பும் நடைபெற்றது.எம்மினத்தின் விடுதலை வேண்டி ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகத்தில் முன்னகர்த்தப்பட்ட விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணோடு முற்றுப்பெற வில்லை. மாறாக காலத்தின் தேவை கருதி தேசியத்தலைவரின் கூற்றுக்கிணங்க வரலாற்றுக் கட்டாயத்தினால் விடுதலைப்போராட்டம் மாற்றுவடிவம் பெற்று இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. இதுவரை காலமும் பல்முனைகளில் எம் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப்போராட்டங்களின் தொடர்ச்சியாக தமிழீழத்திலே பல அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் எம் உறவுகளால் பெரும் எழுச்சிப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது , எம் மக்களின் விடுதலை வேணவாவினை பெரும் எழுச்சியோடு அவ்வறவழிப்போராட்டம் சர்வதேசத்திற்கு எடுத்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே எமது விடுதலையினை நாம் வென்றெடுக்கும்வரை எப்போதுமே எம் போராட்டம் முற்றுப்பெறாது என்கிறவகையிலே தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளிடம் அதற்கான நியாயமான ஆதரவினை வேண்டி எதிர்வரும் 22.01.2021 அன்று ஐ.நா முன்றலினை நோக்கி பெல்சியம், லக்சாம்பெர்க் யேர்மனி, பிரான்சு நாடுகளை ஊடறுத்து பல அரசியற் சந்திப்புக்களை முன்னெடுத்தவாறு தமிழருக்கான நீதியும் விடுதலையும் என்னும் இலக்கோடு மனித நேய ஈருருளிப்பயணம் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
நாளைய தினம் பிரேடா மாநகரத்தில் மீண்டும் ஆரம்பித்து பெல்சியம் நாட்டின் எல்லையினை வந்தடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.