மீண்டும் முதுகில் குத்திய சுமந்திரன்!
தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது சுயரூபத்தை காண்பித்து மீண்டும் மக்கள் முதுகில் குத்தியமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி சர்ச்சைக்குரிய விதத்தில் இரண்டாக பிளந்து சுமந்திரன் நடத்திய அரசியல் நாடகம் முறியடிக்கப்பட்டுள்ளது.
1985ம் ஆண்டு இலங்கை படைகளால் 35 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் பொத்துவில் -பொலிகண்டி நடைபயண நினைவு தூபிக்கான அடிக்கல்லை நாட்டிவைக்க வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் சென்றிருந்தனர்.
இந்நிலையில் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் அவசரஅவசரமாக போராட்டத்தை முடித்தது, தமிழ் அரசு கட்சியினருக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் பல்வேறு தரப்பினர் இணைந்திருந்தும், அவர்கள் யாரும் முடிவிடத்திற்கு வருவதற்கு முன்னரே, சுமந்திரன் தரப்பினர் பொலிகண்டி ஆலடியில் போராட்டத்தை முடித்து விட்டனர்.
மட்டக்களப்பிலிருந்து முதல்நாளில் பயணத்தை ஆரம்பித்த முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நடராஜா போன்றவர்கள் பேரணி முடிவிடத்திற்கு வந்து சேர்வதன் முன்னரே அனைத்தும் முடிந்து விட்டது. அவர்கள் என்ன நடந்ததென்பதே தெரியாமல், அந்த பகுதியில் திண்டாடியதை அவதானிக்க முடிந்தது.
ஏட்டிக்கு போட்டியாக முடித்ததால், சுமந்திரன் தரப்பினர் அவசரஅவசரமாக போராட்டத்தை முடித்ததால், ஏனைய தரப்பினரை இணைத்து போராட்டத்தை முடிக்க தவறியதுடன், இந்த போராட்டத்தின் தனியுரிமை தம்முடையதென்பதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன்,
“அம்பாறையிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்த போது நாங்கள் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் இருந்தோம். நான், சாணக்கியன், கலையரசன், ஜனா ஆகியோரே நடந்து வந்தோம்.
(அப்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுகாஸ் வருகிறார்) சுகாசும் எம்முடன் வந்தார். நாம் எமது ஒற்றுமையை நிலைநாட்டவே அங்கிருந்து நடந்து வந்தோம்.
சிலர் குழப்பத்தை ஏற்படுத்த வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள். இதுதான் பொலிகண்டி.பொத்துவிலில் நடைபயணத்தை ஆரம்பித்தவர்கள் பொலிகண்டிக்கு வந்துள்ளோம். நடுவில் சேர்ந்தவர்கள் வேறெங்கோ போய்விட்டார்கள் என்றார்.
இந்த அவசர போக்கினால் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் போன்றவர்கள் அதிருப்தியடைந்து அந்த கூட்ட இடத்திலிருந்து வெளியேறியதை அவதானிக்க முடிந்தது.
பின்னர், அந்த இடத்திற்கு சிவில் அமைப்பினர் நுழைந்த போது சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் நுழைந்து மக்களுடன் மக்களாக உட்கார்ந்திருந்தனர். ஒரு மக்கள் எழுச்சியில் அரசியல் ஆதாயம் தேடாத அவர்களின் போக்கு பரவலாக பாராட்டப்பட்டது.
அதேபோன்று அங்கு காத்திருந்த சி.வி.விக்கினேஸ்வரன்,சுரேஸ் பிறேமச்சந்திரன் போன்றவர்களும் வெளியேறியிருந்தனர்.
ஆனாலும் பின்னர் அங்கு திரும்பியிருந்த மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் பிரகடனம் வெளியீடு,சிவில் சமூக அமைப்பினரது உரைகள் மற்றும் சபதமென்பவற்றை ஆயிரக்கணக்கில் திரண்டுடிருந்த மக்கள் முன்னிலையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.