November 25, 2024

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி பேரணிக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது

அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.அத்துடன், எதிர்வரும் 4 திகதி இலங்கையின் சுதந்திர தினம் அன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் கறுப்புக் கொடி தொங்கவிடப்பட்டு, அன்றைய தினம் கரிநாளாக அனுஷ்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ்கின்ற சகோதர இனத்தவர்களான முஸ்ஸிம்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகள் குறிப்பாக கொவிட்-19 தொற்று நோயால் உயிரிழக்கும் அவர்களின் உறவுகளின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. முஸ்ஸிம்களும் இந்த அகிம்சை வழிப் போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

இறுதியில் இலங்கை அரசாங்கத்தினால் எவ்வாறான தடைகள் வந்தாலும் அனைத்தையும் சவாலாக ஏற்றுக் கொண்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதுடன், இப்போராட்டத்துக்கு வடக்கு மற்றும் கிழக்கு வாழ் பொதுமக்கள் அனைவரும் தமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் எனவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொத்துவிலில் எதிர்வரும் 3ம் திகதி ஆரம்பமாகும் பேரணி, முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் பொலிகண்டியை வந்தடையும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக்கட்சிகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் அணி மற்றும் மணிவண்ணன் அணி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது