November 21, 2024

இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!

 

நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 13 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களையும் அறிமுகம் சீமான் செய்து வைத்தார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “இவ்வளவு நாளாக வேல்- ஐ கையில் எடுக்காத ஸ்டாலின் தற்போது எடுக்க காரணம் என்ன? மக்களுக்கு மிகப்பெரிய பிரச்னையே அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகள் தான். இத்தனை ஆண்டுகளாக மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியாதவர்கள் 100 நாட்களிலா தீர்க்கப்போகிறார்கள். பா.ஜ.க ஆட்சியின் சாதனை, திட்டங்களை பற்றி பேச ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே கொடும் திட்டங்கள். வட இந்தியாவில் ராமர், கேரளாவில் ஐயப்பன், தமிழகத்தில் முருகன். நாங்கள் வேல்-ஐ கையில் எடுத்தது பண்பாட்டு மீட்சி, ஆனால் பா.ஜ.க, திமுக ஸ்டாலின் வேலை கையில் எடுத்தது தேர்தலுக்காக மக்களை இழுக்கவே. தமிழ் இறை அனைவருக்கும் சொந்தம். இத்தனை ஆண்டுகளாக ஸ்டாலின் ஏன் வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. பா.ஜ.கவும் கட்சி தொடங்கி இத்தனை ஆண்டுகளாக வேல்-ஐ கையில் எடுக்கவில்லை. தற்போது எடுப்பது தேர்தலுக்காக என்பது வெளிப்படையாக தெரிகிறது.

வேளாண் குடிமக்களின் கடனை ரத்து செய்யப்பட வேண்டும் என மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சி இந்திய கட்சிகள் மற்றும் திராவிட கட்களுடன் கூட்டணி வைக்காது. தனித்து தான் போட்டியிடும். 7 பேர் விடுதலை என்பது 25 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தற்போது ஆளுனர் கையெழுத்தில் இருக்கிறது. தற்போது விடுதலை செய்ய வேண்டும். போராடி எப்படியும் விடுதலையை சாத்தியப்படுத்துவோம். தேர்தல் லாபத்திற்காக செய்தாலும் 7 பேரை தயவு செய்து விடுதலை செய்யுங்கள். இந்த முறை வெற்று அறிவிப்பாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான செயலாக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும். நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் வெளியேறவில்லை, நான் தான் வெளியேற்றினேன். அதன் பிறகு அவர்கள் விரும்பிய கட்சியில் சேர்ந்துகொண்டார்கள். நான் யாருக்கும் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. வேண்டும் என்றால் தான் விளக்கம் அளிக்க வேண்டும், வேண்டாம் என்றால் விளக்கி தான் வைக்க வேண்டும். மொத்த சீட்டையும் வெல்ல வேண்டும் என்று தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம்.

இது என் தேசம் என் நாடு இங்கு வாழுகிற குடிமக்களுக்கான அரசியல் தமிழ் தேசிய அரசியல். இட ஒதுக்கீட்டு கொள்கையில் ராமதாசோடு துணை நிற்பேன். இடஒதுக்கீட்டில் அவர் எப்போதுமே உறுதியாக இருப்பார் அந்த இடத்தில் அவருக்கு ஆதரவாக நான் நிற்பேன்” எனக் கூறினார்.