அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளி அம்மன் கோயிலும்,
அனுராதபுரம் புனித நகரில் கவனிப்பாரற்று அவல நிலையில் கிடக்கும் 1000 ஆண்டுகள் பழமை
வாய்ந்த காளி அம்மன் கோயிலும்,
அங்கு கண்டெடுக்கப்பட்ட அழகிய
அம்மன் சிலையும்.
ஒரு தடவை அனுராதபும் புனித நகரத்திற்குச் சென்றபோது மிகவும் மோசமான, அவல நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த பண்டைய காளி கோயிலின் இடிபாடுகளைக் கண்டேன். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
அனுராதபுரம் புராதன நகரின் மத்தியில், தூபராம தாதுகோபத்திலிருந்து அபயகிரி தாதுகோபத்திற்கு செல்லும் வழியில் பாதையின் இடது பக்கத்தில் இக்காளி அம்மன் கோயில் அமைந்திருந்தது. தூபராம தாதுகோபத்தின் வடக்குத் திசையில் 500 மீ தொலைவில் வீதியின் இடது புறத்தில் இக்கோயிலின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இவ்வீதி முன்பு வை வீதி என அழைக்கப்பட்டது. புராதன அனுராதபுரக் கோட்டையின் மேற்கு வாசலுக்கு நேராக இவ்வாலயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அகழியாலும், அரணாலும் சூழப்பட்ட இக்கோட்டைப் பகுதியில் முதலாம் விஜயபாகுவின் அரண்மனையின் இடிபாடுகளும் கெடிகே, தலதாமாளிகை போன்றவற்றின் எச்சங்களும் காணப்படுகின்றன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அனுராதபுரக் கோட்டையின் மேற்கு வாசற் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளின் போது ஆய்வாளர் H.C.B. பெல் அவர்களால் இங்கிருந்த இந்துக் கோயிலின் இடிபாடுகளும், சின்னங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விடிபாடுகளுக்கு மத்தியில் அழகிய அம்மன் விக்கிரகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை மகிஷமர்த்தினியின் தோற்றத்தை உடையதாகும்.
அனுராதபுரம் காளி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட இந்த மகிஷமர்த்தினி அம்மன் சிலை இலங்கையில் கிடைக்கப்பெற்ற தெய்வச் சிலைகளிலேயே மிகவும் உன்னதமானதும், அழகிய வடிவமைப்பையும் கொண்டதாகும். எட்டு கைகளையுடைய இந்த அம்மன் சிலை ஓர் செங்குத்தான நீள் வட்டக்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
அம்மனின் முகத்தில் மூக்குப்பகுதி சற்று சிதலமடைந்து காணப்படுகின்றது. மேலும் சிலையின் அடியில் கணுக்கால் பகுதி முற்றாக வெடித்து சிலை இரண்டு துண்டுகளாகக் காணப்படுகிறது. வெடித்த இந்தப்பகுதி சிலையுடன் சேர்த்து ஒட்டவைத்து முழுமையாக்கப்பட்டுள்ளது.
அம்மனின் எட்டுக் கைகளிலே மேற்பகுதியிலுள்ள கைகளில் சங்கும், கதாயுதமும் ஏந்திய வண்ணம் உள்ளன. அடுத்த இரண்டு கைகளில் வாளும், வில்லும் காணப்படுகின்றன. அடுத்த இரண்டு கைகளில் உள்ள ஆயுதங்கள் உடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இக்கைகளில் திரிசூலமும், ஈட்டியும் இருந்திருக்க வேண்டும். கீழே உள்ள கைகளில் இடது கையில் பெரிய கத்தியை நிலத்தில் ஊன்றிய வண்ணமும், வலது கையை இடுப்பில் வைத்தவாறும் செதுக்கப் பட்டுள்ளது.
தலையிலே கிரீடமும், காதுகளில் வளையமும், தோள்களிலே அம்புக் கூடையும், கழுத்திலே மணிமாலைகளும், மார்பிலே ஆடை அணிகளும், கைகளிலே வளையல்களும், இடையிலே ஒட்டியாணமும், இடுப்பிலே கச்சையும், கால்களிலே சிலம்பும் அணிந்த வண்ணம் வடிவமைக்கப்பட்ட இத்தனை நேர்த்தியான புராதன சிலையை இலங்கையில் வேறு எங்கும் காண முடியாது.
இப்படிப்பட்ட அழகிய, நேர்த்தியான மகிஷமர்த்தினியின் சிலை கொழும்பு தேசிய நூதனசாலையை அலங்கரிக்கும் அதேவேளை, இச்சிலையைப் பாதுகாத்த கோயில் கவனிப்பாரின்றி பற்றைகள் வளர்ந்து கற்தூண்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வீசப்பட்டு அவல நிலையில் காணப்படுகின்றது.
இந்த மகிஷமர்த்தினியின் உருவம் நானாதேசிக வணிகர்களின் வணிக முத்திரையிலும் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நானாதேசிக வணிகர்கள் அனுராதபுரத்தில் அரச செல்வாக்குப் பெற்று விளங்கியிருந்தபடியால், இவர்களின் வர்த்தக நகரங்கள் அனுராதபுரத்தின் பிரதான பெளத்த விகாரைகளுக்கு சமீபத்தில் உருவாக்கப்பட்டிருந்தன. இவர்களின் குலதெய்வமான பரமேஸ்வரியின் வடிவமே மகிஷமர்த்தினி என்பதால் இவ்வம்மனை மூலமூர்த்தியாகக் கொண்ட ஆலயத்தை இவ்விடத்தில் அமைத்திருந்தனர். இவ்வாலயம் பொலநறுவைக் காலத்தில் அமைக்கப் பட்டிருந்தது.
தூபராம தாதுகோபத்திற்கு செல்லும் வழியில் இவ்வாலயம் அமைந்திருந்ததால், தாதுகோபத்தைத் தரிசிக்க வரும் மக்கள் அதிகமாகக் கூடும் இடமான இப்பகுதியில் வணிகர்களின் விற்பனை நிலையங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே அவர்களால் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது என்று ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
இவ்வம்மன் ஆலயம் கர்ப்பக்கிருகம், அந்தராளம், மண்டபம் போன்ற பகுதிகளைக் கொண்டிருந்தது. 20 தூண்கள் கூரையைத் தாங்கியிருந்தன. கோயில் பிரகாரத்தின் மதில்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருந்தன.
பராக்கிரமபாகு மன்னனின் மனைவியான லீலாவதி தனது ஆட்சியின் போது அனுராதபுரத்திலுள்ள தூபிகளைத் தரிசிக்க வரும் மக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக ஓர் தானசாலையை அமைத்தாள். இதற்கு வேண்டிய அரிசி முதல் சரக்குகள் போன்ற பொருட்களை பெறுவதற்காக “பலவலவி மேதாவி” என்னும் மடிகையினை தானசாலைக்கு அருகில் நானாதேசிக வணிகரைக் கொண்டு அமைப்பித்தாள். இத்தானம் பற்றிய லீலாவதியின் கல்வெட்டு ஒன்றும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் மூலம் அனுராதபுரத்தில் தமிழ் நானாதேசிக வணிகர்கள் அரச ஆதரவுடன் விற்பனை மையங்களை அமைத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது நிரூபனமாகிறது.
இவ்வணிகர்களால் தமது விற்பனை நிலையங்களுக்கருகில் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வம்மன் ஆலயத்தைத் தவிர வேறுபல ஆலயங்களும் இவர்களால் அனுராதபுரத்தில் அமைக்கப்பட்டிருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன.
அநுராதபுரத்தில் உள்ள பண்டைய பெளத்த வழிபாட்டிடங்கள் எல்லாம் புனரமைக்கப்பட்டு மக்களால் வழிபடப்படுகின்றன. ஆனால் இக்காளி கோயில் புனரமைக்கப்படவில்லை. கண்கொண்டு பார்க்க முடியாத அவல நிலையில் இக்கோயில் காணப்படுவது மனதுக்கு வேதனையை அளிக்கிறது.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.