ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநரை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் சிறைகளில் உள்ளனர்.
இவர்கள் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதாக கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்று தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து, தன்னை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பேரவை தீர்மானம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூன்று, நான்கு நாட்களில் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில்தான், ஏழு பேர் விடுதலையை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்துள்ளார்.