தடை தாண்டி கொக்கட்டி சோலையில் அஞ்சலி!
இலங்கை படைகளாலும் ஊர்காவல் படையினராலும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 30ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
கொரோனாவை காரணங்காட்டி இலங்கை பொலிஸார் தடைகள் ஏற்படுத்த முற்பட்டபோதும் நினைவேந்தல் நிகழ்வு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபி அருகே இடம்பெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பட்டிருப்புக் கிளைத் தலைவர் பா.அரியநேத்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், கிழக்கு மாகாண சபை முன்னாள் பிரதி அவைத்தலைவர் பிரசன்ன இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்திவேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.