ராஜபக்சக்கள் இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கின்றனர்?
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவும், உள்ளக ரீதியில் தீர்வுகளை எட்ட நல்லாட்சி அரசாங்கம் ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தது. 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை இதன் ஆரோக்கியமான முன்னகர்வு என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்சமன் கிரியெல்ல தெரிவித்தார்.
ராஜபக்ச அரசாங்கம் ஐ.நா. பிரேரணையிலிருந்து வெளியேறினால் இலங்கை பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் எனவும் அது பொருளாதாரத் தடை வரையில் இலங்கையைக் கொண்டு செல்லும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராயவும், ஜெனிவா நெருக்கடிகளைச் சமாளிக்கவும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ள நிலையில் அதன் நோக்கம் தொடர்பிலும், இலங்கை மீதான ஜெனிவா நெருக்கடிகள் தொடர்பிலும் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் இராணுவம் ஒட்டுமொத்தமாக இராணுவக் குற்றங்களைச் செய்ததாக நாமும் கூறவில்லை. ஆனால் தனிப்பட்ட ரீதியில் இராணுவத்தில் ஒரு சிலர் குற்றங்களைச் செய்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள், நீதிமன்ற விசாரணைகள், சாட்சியங்கள் எனப் பல உள்ளன.
இவ்வாறான நிலையில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை ஏற்றுக்கொள்வதாகவும், உள்ளக ரீதியில் இதற்கான விசாரணைகளை நடத்தி நீதியை நிலைநாட்டுவதாகவும் அப்போதைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சர்வதேசத்துக்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதிகளின் பிரகாரமே தொடர்ந்து மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நல்லாட்சி அரசாங்கம் புதிதாக பிரேரணையைக் கொண்டுவந்து இலங்கை இராணுவத்தை போர்க் குற்றங்களில் சிக்கவைக்கவில்லை. போர்க்குற்றங்களில் சிக்கவிருந்த இராணுவத்தையும், அதற்குத் துணை நின்ற தலைவர்களையும் எமது அரசாங்கத்தில் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக காப்பாற்றியுள்ளோம். 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை நாம் நிராகரிக்காது இணை அனுசரணை வழங்கியதன் மூலமாகவே இலங்கைக்கான சர்வதேச ஒத்துழைப்புக்கள் கிடைக்கப்பெற்றன.
இலங்கைக்குள் தமிழர்களைத் திருப்திப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. ஐரோப்பிய நாடுகள் பல எமக்கான உதவிகளை செய்யவும், ஒத்துழைப்புக்களை வழங்கவும் தீர்மானம் எடுத்தன. அவற்றின் மூலமாக இலங்கை சர்வதேசத்துடன் நெருக்கத்தை உருவாக்கியது.
ஆனால் ராஜபக்சவினரின் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவர்களில் பழைய தவறுகளை செய்யத் தயாராகி விட்டனர். 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக்கொள்வதாக கூறியுள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அதற்கான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலைமை தொடருமாயின் இலங்கை தனித்து விடப்படுவதுடன், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கும் உள்ளாக நேரிடும். வெறுமனே சீனாவை மாத்திரம் நம்பிக்கொண்டு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் இலங்கையை மிகப்பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது.
இப்போதும் கூட சீனாவின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அரசாங்கம் ஜெனிவா விவகாரங்களை நிராகரிக்கத் தீர்மானம் எடுத்துள்ளது. அதேபோன்று அரசாங்கம் தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு இலங்கைக்கு எந்த விதத்திலும் கைகொடுக்கப்போவதில்லை, இது வெறுமனே கண்துடைப்பு நாடகம் என்பதை சர்வதேசம் நன்கறியும் எனவும் அவர் கூறினார்.