November 21, 2024

சாதிக்க முயற்சியா? சதி நாடகமா ?

தமிழ் மக்களின் ஐக்கியம் என்பது வரவேற்கதக்கது , அதுவே இன்றைய தேவையும். ஆனால் தற்போதைய இந்த மூவேந்தர் ஒற்றுமை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“ வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்தது“ போன்ற நிலைக்கு மீண்டும் தமிழ் மக்கள் தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. பல சந்தர்ப்பங்களில் போர் குற்ற விசாரணைகள் முடிவடைந்து விட்டது என்ற கருத்துக்களை முன் வைத்த கௌரவ சுமந்திரன் அவர்கள் இப்போது ஐநா மனித உரிமைகள் சபையில் இருந்து மீண்டும் செயலாளர் நாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு கோரியுள்ளதாக கூறுகிறார் இவ்வாறான முடிவு மீண்டும் காலத்தை இழுத்தடிப்பு செய்வதற்கான புதிய யுக்தியாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
அதே போன்று இறுதியாக நடந்த நேர்காணலில் கூட நாம் சர்வதேசத்தில் இருந்து எந்த ஒரு தீர்வையும் எதிர்பார்க்க முடியாது என்ற கருத்தையே கௌரவ சுமந்திரன் முன்வைத்துள்ளார். ஆனால் இதற்கு முற்றும் மாற்றாக கௌரவ கஜேந்திரகுமார் அவர்கள் சர்வதேசத்திடம் இருந்தே தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தை முன் வைக்கின்றார். இரண்டு மாறுபட்ட கருத்துடையவர்கள் இணைந்து கொள்கிறார்கள் என்றால் அங்கே ஏதோ ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அது மக்களுக்கு நன்மையாக இருந்தால் நாமும் வரவேற்றுக் கொள்ளலாம் .
‌. ஆனால் இங்கே அவ்வாறான நன்மைகள் நிகழும் சாத்தியங்கள் அரிதாகவே தெரிகின்றபோது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியம் பேசுகின்ற‌ சக்திகளின் வாக்கு சரிவையையும் , அரச சார்பு அபிவிருத்தி அரசியல் சக்திகளின் எழுச்சியை கட்டுப்படுத்தவே இவ்வாறான போலி நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதே போன்று இந்தியா தமிழர் நலன்களில் அக்கறையாக இருக்கிறார்கள் என்று கௌரவ சுமந்திரனே ஏற்றுக்கொள்ளும் போது , இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்த இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக சர்வதேச விசாரனை என்று இந்தியாவை சிக்கலில் சிக்கவைத்து தமிழர்கள் மீது இந்தியாவை வெறுப்பு அடைய வைப்பதற்கான நடவடிக்கையாகவும் இது இருக்கலாம் என்று என்ன தோன்றுகிறது.
ஒட்டு மொத்தத்தில் 1976 யில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் தமிழ் ஈழத்தில் என்று எப்படி மக்களை உசுப்பேற்றி தமிழரசு கட்சி வாக்குகளை கொள்ளையடித்ததோ அதே போன்று 44 வருடங்களின் பின்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள வாக்கு வங்கி சரிவை ஈடுகட்டவே நாங்கள் ஒற்றுமையாக செயல்பட தொடங்கியுள்ளோம் என்ற‌ மாயையை போலி தமிழ் தேசியவாதிகள் கையில் எடுத்து நாடகம் ஆட முயற்சி செய்கிறார்கள் என்பதே உண்மை.