படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15வது ஆண்டு நினைவேந்தல்!
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் வேலைக்குச் செல்வதற்காக பேருந்துக்குக் காத்திருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே ஆண்டு ஜனவரியில் திருகோணமலைக் கடற்கரையில் சிறப்பு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் உடல்களை நிழற்படம் எடுத்து, அம்மாணவர்கள் அருகில் இருந்து தலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்களென்று சுகிர்தராஜன் உறுதிப்படுத்தியிருந்தார்.
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று அரச தரப்பு விசாரணையை திசைதிருப்ப முயற்சித்தபோது, சுகிர்தராஜனின் நிழற்படங்கள் அப்படுகொலைகளை திரையிட்டுக் காட்டின.
மட்டக்களப்பு குருமண்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட சுகிர்தராஜன் அம்பாறை வீரமுனையில் வசித்துவந்த நிலையில் திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தார்.
யுத்த சூழலிலும் துணிச்சலுடன் ஊடக பணியாற்றிய போதே 2006 ஜனவரி 24 ஆம் நாள், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மட்டக்களப்பில் நடைபெற்ற சுகிர்தராஜனின் நினைவேந்நதல் நிகழ்வு திருகோணமலையில் மேற்கொள்வதற்காக கோவிட் பெருந்தொற்று நிலமை காரணமாக பின்னர் மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இந்த நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை கேலிச்சித்திர ஊடகவியலளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் பதினொரு ஆண்டுகள் கடந்துள்ளன.
இலங்கையின் குற்றவியல் விசாரணை திணைக்களம் ஊடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளுக்கு அமைய எக்னலிகொட கொழும்பு மாவட்ட ராஜகிரிய பிரதேசத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவால் கடத்தப்பட்டு கிரிதல புலனாய்வு பிரிவுக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அவர் அப்போதைய இலங்கை அரச அதிபர் மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் தொடர்பாக எழுதிய புத்தகம் தொடர்பாகவே அவரிடம் விசாரணை நடாத்தப்பட்டது. குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளுக்கமைய, கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் எந்தவொரு குறிப்புக்களையும், பதிவுகளையும் மேற்கொள்ளாமல் பிரகீத் எக்னலிகொடவை 25-ம் நாள் தொடக்கம் 27-ம் நாள் மாலை வரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இருந்து கிரிதல வரை கொண்டு சென்றிருக்கிறார்கள்.
25ம் நாள் எக்னலிகொடவை கிரிதல இராணுவ முகாமில் தான் கண்டார் என்று விசாரணைக்குழுவிடம் சாட்சியமளித்த நபர் பின்னர் கிரிதல இராணுவ முகாமிலிருந்து தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதற்கு சதித் திட்டம் தீட்டப்படுவதாக காவற்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதிகோரி போராடிவரும் அவரின் மனைவி சந்தியா எக்னலிகொடவுக்கு எதிராக சுவரொட்டி மற்றும் துண்டுப்பிரசுரம் ஆகியன பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவர் நீதிமன்றில் வைத்து மிரட்டப்பட்டிருந்தார்.
அத்துடன், கிரித்தல இராணுவ முகாமிற்கு விசாரணைக்கெனச் சென்றபோது, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவான தகவல்களையோ, ஆவணங்களையோ, ஒலிப்பதிவு ஒன்றையோ இராணுவம் தம்மிடம் ஒப்படைக்கவில்லையென குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது.
அத்துடன் பல முறை தாம் முறையிட்டபோதிலும் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் குற்றப் புலனாய்வுத் துறையினர் குறை தெரிவித்திருந்தனர்.
இவ்வாறான நிலையில் 11 ஆண்டுகள் கடந்துள்ள போதும், எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வழமைபோன்று இலங்கையின் நீதித்துறையால் எவ்வித நீதியும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.