திரும்புகின்றது தந்தை செல்வா அகிம்சை வழி?
இலங்கை அரசின் திட்டமிட்ட இனவாத அரசியல் நடவடிக்கைகளிற்கு எதிரான ஜனநாயக வழி மக்கள் போராட்டங்கள் வடக்கில் உக்கிரமடையவுள்ளது.
இது தொடர்பில் சிவில் தரப்புக்கள்,கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளன. நாளை யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களும் நடைபெறவுள்ளன.
இதனிடையே சிவில் உடையில் வந்த இராணுவத்தினரே, நிலாவரையில் கிடங்கு வெட்டினார்கள் என, தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தமிழர்களுடைய பாரம்பரிய நிலங்கள் பறிக்கப்படுவது மாத்திரம் அல்ல மத அடையாள சின்னங்கள் சிதைக்கப்பட்டு பௌத்த மத சின்னங்கள் புகுத்தப்படுகின்ற ஒரு நிலைமையை தாங்கள் பார்க்கின்றோமென்றார்.
இதற்கு நிச்சயமாக, தமிழர் தரப்பில் இருந்து மிகப்பெரிய அளவிலான ஒரு எதிர்ப்பு இயக்கம் இல்லாமல் இருப்பது பெரிய குறைபாடு எனவும், அவர் தெரிவித்தார்.
‚நாங்கள் மீண்டும் மீண்டும் தென்னிலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புகின்றோம் நாங்கள் புத்த பெருமானுக்கு எதிரானவர்கள் இல்லை. மிகப்பெரிய அரசனாக இருந்து அனைத்தையும் துறந்து வந்த புத்த பெருமானின் போதனைகளை நீங்கள் பின்பற்றாமல் அதே புத்தபெருமானை எங்களை ஆக்கிரமிக்கின்ற நடவடிக்கைக்கு பயன்படுத்துவதால் தான் நாங்கள் புத்தபெருமானை எதிர்க்கின்றோம்‘ எனவும், அவர் கூறினார்.
‚பல இடங்களை தொடர்ந்து ஆக்கிரமிப்பவர்கள் யாழ்ப்பாணம் நிலாவரையில் தோண்ட ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதில் தெளிவாக தெரிகின்றது தோண்ட ஆரம்பித்த பொழுது நான்கு பேர் சீருடை அணியாத சிவிலுடையில் வந்த இராணுவத்தினர்தான் வெட்டி இருக்கின்றார்கள். அவர்களுக்கு அங்கு என்ன வேலை? தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் வந்தார்கள் என்றாலும் பரவாயில்லை அதன் பின்னர்தான் தொல்பொருள் திணைக்கள ஊழியர்கள் பொறுப்பெடுத்து இருக்கின்றார்கள்.
‚அங்கே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவி அத்தியட்சகர் நின்றார். அவருக்கு சிங்கள மொழியிலே மிக காத்திரமாக பதிலை நான் வழங்கியிருந்தேன் புல்லு வெட்ட வேண்டும் என்றால் எதற்கு கிடங்கு என்றேன்.
அத்துடன், கட்டிடங்களை கட்டுவதற்கு மதிப்பீடுள் செய்யப்பட இருக்கின்றோம் என்றார்கள். கிடங்கு ரீ வடிவில் ஆழமாக வெட்டப்பட்டிருந்தது. உள்ளிருந்து எடுக்கப்பட்ட மண் சுவர் அருகில் போடப்பட்டிருந்தது. அதற்குள் எதையாவது கொண்டுவந்து புதைத்தார்களோ தெரியவில்லை. இன்றும் சில காலத்தில் புத்தரோ அல்லது வேற ஏதோ வெளிவரலாம் எனவும் தெரிவித்தார்.