November 21, 2024

குருந்தூர் போனார் சிவமோகன்?

தமிழ்மக்கள் மீது ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கட்டமாகவே குருந்தூர் மலை விடயத்தை பார்ப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சி.சிவமோகன் தெரிவித்தார்.

இலங்கை தொல்லியல் திணைக்களத்தாலும், பொலிசாரினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குமுழமுனையில் அமைந்துள்ள தமிழர் வழிபாட்டுப் பிரதேசமான குருந்தூர் மலைக்கு நேற்று நேரடி விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதுவொரு தமிழர் பிரதேசம். இங்கு எமது மக்கள் ஐயனார் ஆலயத்தை பராமரித்து அதனை வழிபட்டு வந்தனர் என்பது தான் தமிழர் வரலாறு. இனரீதியாக தமிழர்களிற்கெதிராக உயர்மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் ஒன்றிற்கமைவாக பொய்யினை கூறி தொல்லியல் திணைக்களம் ஆராய்ச்சி என்ற போர்வையில் இங்கு வந்துள்ளது.

திட்டமிட்டு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினால் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கான ஆரம்பக்கட்டமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

இந்த மலையின் கரைப்பக்கமாகத் தான் எங்களால் வரமுடிந்துள்ளது. இந்த மலையில் ஏறி என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு இதுவொரு ஆதாரம்.

நான் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறியிருந்தும் அவர்கள் என்னை மலைப்பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. உண்மையாக தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டுமாகவிருந்தால் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் உள்வாங்கப்பட்டு இது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.