ஜனாஸா எரிப்பு விவகாரம்! இம்ரான் கானின் தலையீட்டை நாடும் முஸ்லீம் அமைப்புகள்
இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டை நாடி உலகின் பத்து
நாடுகளில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து கூட்டாக கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் முன்னணி அமைப்புகளுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தில் நேர்மையான சமூக அக்கறையுடன் தொடர்ச்சியாக இயங்கி வரும் 23 முன்னிலை சமூக அமைப்புகள் இதில் முழுமையான விபரங்களுடன் கையொப்பமிட்டுள்ளன.
இதற்கு முன்னரும் மாலைதீவு விவகாரத்தில் ஒற்றுமையுடன் செயற்பட்டு அதனூடாக சாதகமான பிரதிபலனைக் கண்டதன் தொடர்ச்சியில் இம்முறை சர்வதேச அளவிலான இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை மற்றும் உணர்வினை வெளிப்படுத்தும் விதமாக இந்த கூட்டு முயற்சி இடம்பெற்றதாக ஏற்பட்டாளர்கள் விளக்கமளித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை செல்வதற்கான திட்டமொன்று இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து இவ்விஜயத்தின் போது கட்டாய ஜனாஸா எரிப்பு விடயத்தினால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டிருப்பதை இலங்கை ஜனாதிபதியிடம் எடுத்தியம்பி இதற்கொரு முடிவைக் காண்பதற்கு உதவுமாறு கோரியே இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் உலகளாவிய ரீதியில் வாழும் முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதித்திருக்கும் சூழ்நிலையில், முஸ்லிம் உம்மத்துகளின் விவகாரங்களில் பகிரங்கமாகக் குரல் கொடுக்கும் இம்ரான் கான், இவ்விடயத்திலும் தனது பங்களிப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.