சுமந்திரன், சிறிதரன் தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலை – தமிழ் அரசு கட்சியில் இணைய மணிவண்ணன் தரப்பு முயற்சி!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளர்ச்சி அணியான வி.மணிவண்ணன் தரப்பினர் இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்ட வி.மணிவண்ணன் அந்த கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும், கட்சி பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரது அணியை சேர்ந்த யாழ் மாநகரசபை, நல்லூர் பிரதேசசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை ஆகியவற்றின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலரும் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. கட்சியின் முடிவுகளிற்கு நீதிமன்றம்இடைக்கால தடைவிதித்திருந்தாலும், மணிவண்ணன் தரப்பு இனி முன்னணியில் இணைந்து செயற்பட வாய்ப்பில்லை.
யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் கட்சியின் முடிவை மீறி அவர்கள் போட்டியிட்டது, இரு தரப்பையும் இனி இணைய வைக்கும் வாய்ப்பை இல்லாமல் செய்தது.
இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியில் மணிவண்ணன் தரப்பை இணைப்பது குறித்த யோசனை அண்மையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையிடம் வைக்கப்பட்டுள்ளது. வி.மணிவண்ணன் தரப்பின் பிரமுகர்கள் சிலரினாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமை இந்த விவகாரத்தில் சாதகமான நிலைப்பாட்டில் இல்லை. யாழ் மாநகரசபை முதல்வர் தெரிவில், ஆர்னால்ட்டை ஆதரிக்கும்படி மாவை சேனாதிராசா, நேரடியாக மணிவண்ணனை கேட்டிருந்தார்.
எனினும், கட்சியின் முடிவை மீறி தன்னால் ஆதரவளிக்க முடியாது என கூறிய மணிவண்ணன், பின்னர் முதல்வர் பதவிக்கும் போட்டியிட்டிருந்தார். மணிவண்ணன் அரசியல் நேர்மையற்ற விதமாகவே நடந்து கொண்டதாக, தமிழ் அரசு கட்சி தலைமை கருதுகிறது. அதனால்தான், துரையப்பாவையும் மணிவண்ணனையும் குறிப்பிட்டு மாவை சேனாதிராசா கருத்து தெரிவித்திருந்தார்.
இதேவேளை, மணிவண்ணன் தரப்பின் நகரவுகளின் பின்னால் எம்.ஏ.சுமந்திரன் இருக்கிறார் என்றும் தமிழ் அரசு கட்சி கருதுவதால், மணிவண்ணன் தரப்பு உடனடியாக தமிழ் அரசு கட்சியுடன் இணைக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இதேவேளை, எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சுமந்திரன், சிறிதரன் தரப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலைமை உருவாகினால், அந்த கூட்டுடன் மணிவண்ணன் தரப்பு இணைவது குறித்தும் கலந்துரையாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் அரசு கட்சியில் வலுவடைந்த மோதல் முற்றி சுமந்திரன், சிறிதரன் தரப்பினர் கூட்டமைப்பை விட்டு வெளியேறவும் வாய்ப்புண்டு.
அப்படியான நிலைமை ஏற்பட்டால், சிறிய கட்சிகளை இணைத்து களமிறங்க மணிவண்ணன் தரப்பு திட்டமிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.