November 22, 2024

இலங்கைக்கு எதிராக வலுவான தீர்மானம் கொண்டு வரவேண்டும் – மெக்டொனாக்

எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார்.பிரித்தானியப் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் , மனித உரிமை மீறல்கள் மற்றும் இறுதிக்கட்ட போரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் உட்பட மனித உரிமைகளுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் தொடர்பில் ராஜபக்ஷ சகோதரர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் மனித உரிமைகள் , நீதி மற்றும் பொறுப்புக்கூறலை பாதுகாக்கும் வகையில் பிரித்தானிய அரசு ஜெனிவாவில் செயற்பட வேண்டும்.

ஆகவே இலங்கை விடயத்தில் புதிய தீர்மானமொன்றிக்கான உறுதிப்பாட்டை பிரித்தானிய அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அந்த தீர்மானத்தில் இலங்கையை கண்காணிக்கும் அலுவலகத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் ஸ்தாபித்தல்  என்ற விடயம் அமையப்பெற்று ஒரு சிறப்பு பொறிமுறை கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.