November 22, 2024

உணவுத்தவிர்ப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் கதவடைப்புப் போராட்டம் தொடரும்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.அத்தோடு „போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்“ எனவும் இ.அனுசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று (11.01.2021) யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை தொடர்ந்து எமது மாணவர்கள் 6 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

தொடர்ந்து இன்று காலை துணைவேந்தர் தலைமையில் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டதை அடுத்து மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டிருந்தோம்.

அதற்கு அமைவாக இன்றைய நாள் முழுவதும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கை.

ஏனெனில் இது சிங்கள அரசாங்கத்தால் இராணுவ, மற்றும் பொலிஸ் கெடுபிடிகள் என்பன பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளே இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள்  அரசுக்கு எதிராக அரசை எதிர்த்து இன்று நாங்கள், படையினர் மற்றும் பொலிஸார் உடன் வெளியேற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இதனால் அடக்கு முறைகளுக்கு எதிரான வெளிப்பாடாகவே  ஹர்தாலை இன்று திற்கட்கிழமை முன்னெடுத்துள்ளோம்.

எமது போராட்டத்திற்கு பல பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஊடகவியலாளர்கள், முகப்புத்தக போராளிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அத்தோடு எமது  பல்கலைக்கழக மாணவர்கள் முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர், ஆசிரியர்கள் மற்றும் இறுதியாக இந்த போராட்டத்தை நிறைவு செய்து வைத்த துணைவேந்தருக்கும் மாணவர் ஒன்றியம் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்ளுகின்றோம் என தெரிவித்துள்ளார்.