நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் “மாமனிதர்“என மதிப்பளிப்பு
திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
10.01.2021நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் “மாமனிதர்“என மதிப்பளிப்பு
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறுகளைத் திரைப்படங்களாக வெளிக்கொண்டு வரவேண்டுமென்ற, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுத்த திரைப்பட இயக்குநர் நவரட்ணம் கேசவராஜன் அவர்கள், 09.01.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழமக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழீழ மண்ணில் திரைப்பட உருவாக்கமென்பது மிக அருகியிருந்த காலப்பகுதியில், திரைப்படங்களை உருவாக்கப் பெருமுயற்சியோடு உழைத்தவர். 1986ஆம் ஆண்டிலிருந்தே புதியபரிமாணம் நோக்கி, புதிய வீச்சோடு திரைப்படங்கள் உருவாக முன்னின்று செயற்பட்டவர். தமிழீழ நிதர்சனப் பிரிவுடன் இணைந்து விடுதலைப்போராட்டத்தின் வெற்றிகளை, மாவீரர்களின் தியாகங்களை, போராளிகளின் அர்ப்பணிப்புக்களை, மக்களின் வலிசுமந்த வாழ்வை, இழப்புக்களைக் குறும்படங்களாவும் முழுநீளத் திரைப்படங்களாகவும் இயக்கி வரலாறுகளை ஆவணமாக்கித்தந்தவர்.
பிஞ்சுமனம், திசைகள்வெளிக்கும், கடலோரக்காற்று, அம்மா நலமா எனப்பல முழுநீளத் திரைப்படங்களையும், அப்பா வருவார் போன்ற பல குறும்படங்களையும் உருவாக்கித் தந்ததோடு, இளையவர்கள் பலரைத் திரைப்படத் துறைசார்ந்து வளர்த்துவிட்ட பெருமையும் இவருக்கு உரித்தானது. திரைப்பட உருவாக்கத்தில் மட்டுமன்றி, விவரணத் தயாரிப்பாளனாக, சிறந்த கதாசிரியனாக,நடிகனாக, நிகழ்ச்சித் தயாரிப்பாளனாகவென பன்முகத்திறமை கொண்டு விளங்கிய இவர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நன்மதிப்பையும் பாராட்டுதல்களையும் பெற்றிருந்தார். இன்று, இவர் எம்மோடு இல்லை என்றாலும் இவரது கலைப்படைப்புகள் ஊடாக என்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார்.
இவரது இழப்பில் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்; நவரட்ணம் கேசவராஜன் அவர்கள், தமிழீழத் திரைப்படத்துறைக்கு இயக்குனராக பணியாற்றி, எமது விடுதலை வரலாற்றை ஆவணமாக்கிய தேசப்பணிக்காகவும் இனப்பற்றிற்காகவும் மதிப்பளித்து ~~மாமனிதர்|| என்ற அதியுயர் தேசியவிருதை வழங்குவதில் நாம் பெருமையடைகின்;றோம். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்துவிடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.
‘‘புலிகளின்தாகம்தமிழீழத்தாயகம்“
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.