November 22, 2024

போராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் – மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா நோன்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

இது குறித்து யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ப.உஜாந்தன் தெரிவிக்கையில்,

நேற்றையதினம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூர்ந்து தூபியொன்று அமைக்கப்பட்டது.

அந்த தூபியினை நேற்றையதினம் இரவு வேளையிலேயே எவருக்கும் தெரியாது அதனை இடித்தழித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை கேள்வியுற்று இங்கு வருகை தந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் சரி , அரசாங்கத்திற்கும் சரி தங்களால் முடிந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.

மேலிடத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் தான் இதனை மேற்கொண்டார் என பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமா குறிப்பிட்டுள்ளார். இங்கிருந்து இராணுவம் மற்றும் பொலிஸாரை வெளியேறுமாறு தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்த இடத்தில் கூடியிருப்பவர்கள் வீடியோ எடுக்கப்பட்டு, அவர்களுடைய முகங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸாரால் அறிவித்தல் விடப்பட்டுள்ளது.

இதனை நாம் எமது சமூகத்தின் மீதான அக்கறை கொண்டவர்களாகவும் நாம் வன்முறையாளர்கள் அல்ல என்பதனை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவதற்காகவும் இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாங்கள் வன்முறைகளை வெளிக்காட்டாமல் நாம் அமைதியாக இந்த போராட்டத்தை இடைநிறுத்துகின்றோம்.

இந்த போராட்டம் மற்றுமொருநாள் அல்லது கொரோனா தொற்று நீங்கிய பின்னர் திகதியொன்றை குறிப்பிட்டு முன்னெடுப்போம்.

அனைவருக்கும் தெரியும் இங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகின்றது. அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள் என்று.. அந்தவகையில் இங்கிருக்கும் அனைவரின் நலன்கருதியும் எமது சக மாணவர்களின் நலன்கருதியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த முடிவை உத்தியோகபூர்வமாக எடுத்துள்ளோம் என்பதை எமது மக்களுக்கும், புலம்பெயர் மக்களுக்கும் நல்லிணக்கத்தை விரும்பும் சகோதர மொழிபேசும் உறவுகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என தெரிவித்தார்.