„வெற்றிச் சின்னத்தை இதே பல்கலையில் நிறுவும் காலம் வரும்“ சீமான் ஆக்கிரோசம்!
முள்ளிவாய்க்கால் நிலத்தில் போர் மௌனிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஈழப்பேரழிவைச் சந்தித்து ஆறா ரணத்தையும், கொடும் பேரிழப்பையும் சந்தித்து நிற்கும் தமிழர்களைச் சீண்டும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப் படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இன அழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நிலத்தில் போர் மௌனிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ஈழத்தில் இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றுமுடித்து, அந்தப் இழப்புக்கு நீண்டகாலமாய் நீதிகேட்டு உலகத்தமிழர்கள் உள்ளம் குமுறிக்கொண்டிருக்கையில், வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போலச் சிங்களப் பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கும் இக்கோரச்சம்பவம் ஏற்றுக்கொள்ளவே முடியாத வன்மையான கண்டனத்திற்குரியது.
ஒரு இனத்தைப் பேரழிவுக்குள் தள்ளி, இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்து, தமிழர்களின் வீட்டையும், நாட்டையும் அழித்து, நிலங்களை அபகரித்து, தமிழ்ப்பெண்களைச் சூறையாடி, தமிழர்களை அடையாளமற்று அழித்து முடித்து, மொத்த நாட்டையும் தங்களுடையதாக மாற்றிக் கொண்டுவிட்ட பிறகும், தமிழர்கள் மீதான வன்மமும், ஆத்திரமும் துளியளவும் சிங்களப்பேரினவாதிகளுக்குக் குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. போர் முடிந்து, அங்கு அமைதி திரும்பிவிட்டது என்றுரைத்தவர்கள் இத்தகைய அடையாள அழிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அன்றைக்கு யாழ் நூலகம் எரிக்கப்பட்டது; இன்றைக்கு யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள நினைவு மண்டபம் அழிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் தொடர்ச்சியே. ஒற்றை இலங்கைக்குள் சிங்களர்களோடு இணைந்து தமிழர்கள் வாழ்கிறவரை, சிங்கள ஆட்சியாளர்களுக்குக் கீழ் இருக்கிற வரை எத்தனை ஆட்சி மாறினாலும் தமிழர்களுக்கு இதுதான் நிலை என்பதை இச்சம்பவத்தின் வாயிலாக உலகத்தார் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாடும் மாதமான தை மாதத்தில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே அரசு தமிழர்களுக்குப் பொங்கல் பரிசாக இந்த இடிப்பை நிகழ்த்தியிருக்கிறது.