November 22, 2024

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு விவகாரத்தில் கனடா அரசியல்வாதிகள் கண்டனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இனவாத செயலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, பிரம்ப்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் உள்ளிட்ட கனேடிய அரசியல்வாதிகள், மனித உரிமை ஆா்வலர்கள் கண்டித்துள்ளனர் .

ஹரி ஆனந்தசங்கரி எம்.பி.

போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இழிவான செயல் என கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் ஸ்கார்பாரோ-ரூஜ் பார்க்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கண்டித்துள்ளார்.

இலங்கையில் தமிழர்களின் வரலாற்று அடையாளங்கள், நினைவுச் சின்னங்களை அழித்து ஒழிக்கும் இவ்வாறான தீய எண்ணம் கொண்ட செயற்பாடுகளை தடுத்து நிறுத்த சா்வதேச நீதி மற்றும் பொறுப்புக் கூறல் பொறிமுறை முன்பு ஸ்ரீலங்காவை நிறுத்த வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தியுள்ளார்.

பட்ரிக் பிரவுன் (கனடா – பிரம்டன் நகர மேயர்)

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நினைவுகூரும் நினைவுச் சின்னங்களை அழிப்பது இலங்கை நடத்திய இனப்படுகொலையின் மற்றொரு வடிவமாகும் என பிரம்டன் நகர மேயர் பட்ரிக் பிரவுன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த விவேகமற்ற தமிழின நினைவுகளை அழிக்க முயலும் ஸ்ரீலங்காவின் செயற்பாட்டுக்கு எதிரான கனடா மற்றும் சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் அவா் அழைப்பு விடுத்துள்ளார்.

ஹர்கிரத் சிங் (பிரம்டன் நகர சபை உறுப்பினர்)

போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமை மிகவும் கவலையளிக்கிறது. ஒரு இன மக்களின் வரலாற்றை அழிக்க முயற்சிப்பது இனப்படுகொலையின் ஒரு பகுதியாகும் என பிரம்டன் நகர சபை உறுப்பினர் ஹர்கிரத் சிங் தெரிவித்துள்ளார்.

விஜய் தணிகாசலம் (ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர்)

இலங்கை அரசால் 2009 இல் படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைகூரும் வகையில் யாழ்.பல்பலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடித்து அழிக்கப்பட்ட செயலை வன்மையாகக் கண்டிப்பதாக ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

குர்ராதன் சிங் (கனேடிய மனித உரிமை ஆர்வலர்)

இலங்கையில் இடம்பெற்ற மிருகத்தனமான தமிழ் இனப்படுகொலையின் வரலாற்றை அழிக்கும் முயற்சியின் ஒரு அங்கமே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுத் தூபி இடித்தழிப்பு என கனேடிய மனித உரிமை ஆர்வலரும் மனித உரிமை சட்டத்தரணியுமான குர்ராதன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த மற்றொரு வகையான இன அழிப்பு முயற்சியை அனைத்து தலைவர்களும் கண்டிக்க வேண்டும், தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் அவா்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.