ஓய்வு பெற்றார் சகாயம்! ரஜினி காத்திருந்தது, கமலுக்கு கிடைக்குமா!
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிக்கு உதாரணமாகக் காட்டப்படும் மாவட்ட ஆட்சியர் சகாயம் (ஐ.ஏ.எஸ்) தனது விருப்ப ஓய்வு கடிதத்தை அரசிடம் கொடுத்திருந்தார். ஆனால், அது குறித்து முடிவெடுக்கப்படாமல் இருந்தது அரசு. இந்நிலையில் இன்று திடீரென்று சகாயத்தை பணியிலிருந்து விடுவிக்கும் முடிவை எடுத்துள்ளது.மதுரை ஆட்சியராக இருந்தபோது, துணிச்சலுடன் கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்தவர் சகாயம். கடந்த 7 வருடங்களாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவி வகித்து வந்தார். இன்னும் பல துணிச்சலான செயல்களுக்கு சகாயத்தையே உதாரணமாகக் கைக்காட்டுவார்கள்.
தம் கருத்தை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்பத்தும் இயல்பு கொண்டவர் சகாயம். இன்னும் மூன்று ஆண்டுகள் பணிகாலம் இருக்கும் சூழலிலும் விருப்ப ஓய்வு அறிவித்து, பணியிலிருந்து வெளியேறியது அதிர்ச்சியாகவே இருக்கிறது பலருக்கும். தம் பணிகளை சுதந்திரமாகச் செய்ய அனுமதி கிடைக்க வில்லை என்பது, அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு மாற்றியதுமே இந்த முடிவை நோக்கி சகாயத்தை உந்தித் தள்ளியது என்கிறார்கள்.
சகாயம் அடுத்து என்ன செய்வார் என்பதே பலரின் கேள்வி. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருந்தபோது சகாயத்தை அழைத்ததாகவும், சகாயம் சென்று சந்திக்க மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒருவேளை அந்தச் சந்திப்பு நடந்திருந்தால் ரஜினி கட்சியின் முதல்வர் வேட்பாளராக சகாயம்கூட இருந்திருக்கலாம். ரஜினியே கட்சி தொடங்க வில்லை எனும்போது அது குறித்து யோசிக்க வேண்டியதில்லை.
சில வாரங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சூரப்பா மீதான விசாரணையைக் கண்டித்திருந்தார். மேலும், சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஒரு பேட்டியில்கூட, சகாயம் (ஐ.ஏ.எஸ்)போன்றவர்கள் எங்களோடு இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தார் கமல். எனவே, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் சகாயம் (ஐ.ஏ.எஸ்) சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
சகாயத்தின் நலன்விரும்பிகள் மக்கள் பாதை எனும் அமைப்பை நடத்தி வருகிறார்கள். அதன் நிகழ்ச்சியில் சகாயம் கலந்துகொள்வது வழக்கம். அநேகமாக அந்த அமைப்புக்குத் தலைமை தாங்கி, கமல் கட்சியோடு இணைந்து தேர்தலைச் சந்திக்கக்கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். எப்படியும் இன்னும் ஓரிரு வாரங்களில் சகாயம் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.