ஜெனீவாவை கையாள்வது! ஒரு புள்ளியில் இணக்கம்!!
உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
அதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பொறுப்பு கூறல் தொடர்பாக மனித உரிமைகள் பேரவையில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும். அந்தவிடயம் ஒரு பூச்சியத்தில் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பாக இன்று பேசியிருந்தோம்.
2012 இலிருந்து தமிழ்தேசிய மக்கள் முண்ணனி அந்தவிடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்திருக்கிறோம். அது தொடர்பிலும் பேசப்பட்டது.
மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்க கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கி கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு இணக்கப்பாடு வந்திருந்தது.
மேலதிகமாக வடகிழக்கை சார்ந்த தமிழ்கட்சிகள் சிவில் அமைப்புகள் ஒரு புள்ளியில் சந்திக்ககூடிய வகையில் உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைபேரவை, அதன் ஆணையாளர் ஆகியோருக்கு தெளிவான ஒரு செய்தியை வழங்கவேண்டியமை தொடர்பாகவும் ஒரு இணக்கப்பாடு வந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மேலதிகமாக செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிவில் சமூகபிரதிநிதிகளின் அமைப்பும், விக்கினேஸ்வரனுடைய அமைப்பு உள்ளிட்ட ஒரு குழு இணைந்து ஒரு புள்ளி என்றவிடயத்தை எழுத்து மூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியிருக்கிறோம்.
மிகவிரைவில் அது முன்னெடுக்கப்படும். அதனை ஒரு ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கிறோம். என்றார்.